DMK

#குடியைகெடுக்கும்அதிமுக - டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு: தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிர நிலையை எட்டியுள்ள நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசிடம் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நீதியை கேட்டு பெறாமல், பேரிடர் சமயத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து அதன் மூலம் கல்லாவை கட்ட எத்தனித்துள்ளது எடப்பாடியின் அ.தி.மு.க அரசு.

ஏற்கெனவே, திடுதிப்பென அறிவித்த முழு ஊரடங்கால் செய்வதறியாது தவித்த மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்ததால் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி 500 கணக்கில் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே சமூக பரவல் நிலையை அடைந்திருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து மேலும் பல்லாயிரக் கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக அரசு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடித்து, கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தியவாறு அனைவரும் அவரவர் வீட்டு வாயில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், மாவட்ட தலைநகரங்களில் கழக நிர்வாகிகள் என அனைவரும் டாஸ்மாக் திறப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read: “வருவாயை ஈட்ட, மக்கள் மீது பழிப்போடுவதா?” - டாஸ்மாக் திறப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!