DMK
“அதிகார அத்துமீறல் வேண்டாம்; ஊடகத்தினரை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
அ.தி.மு.க அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றினால் பொதுமக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவது கண்டனத்திற்குரியது.
கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலைபார்த்து வரும் நிலையில், பகல் 11 மணிவரை அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்பதையும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சுட்டிக்காட்டியதை, “சிம்ப்ளிசிட்டி” இணைய இதழ் வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக , பத்திரிகையாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் அடைத்து வைத்திருந்ததும், அதன்பின்னர் இரவு நேரத்தில் சிம்பிளிசிட்டி பதிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் சட்டவிரோத செயல்பாடாகும்; ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடாகும்.
ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு, ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலுமணியும் காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பேரிடர் நேரத்தில், இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, சிம்பிளிசிட்டி பதிப்பாளரை விடுவித்து, ஊடகத்தினர் இடையூறின்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?