DMK

மாநிலங்களவை வேட்பாளர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இந்தக் காலி இடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய 13-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு அறிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிவா, ஏற்கனவே 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். சிறந்த நாடாளுமன்றவாதி எனும் பெருமை பெற்றவர். தலைசிறந்த பேச்சாளர். சிறந்த வாசிப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே தி.மு.க மாணவர் அணியில் சேர்ந்து கட்சி தொண்டாற்றியவர். 1976-ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யப்பட்டார். தற்போது, தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்.

அந்தியூர் செல்வராஜ், தி.மு.க ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தார். இவர், தி.மு.கவில் ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளராக இருந்து வருகிறார்.

என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஆகும். தி.மு.க தலைமைக்கழக சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார்.

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தி.மு.க தலைவர்மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்வில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அர.சக்கரபாணி, பிச்சாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read: “அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் அயராமல் போராடும் தி.மு.க தலைவர்” - கொண்டாடும் உடன்பிறப்புகள்!