DMK

தி.மு.க உட்கட்சித் தேர்தல் : நிர்வாகிகளாக 100% பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைக்கழகம்!

தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 88,398 கிளைகளுக்கு பிப்ரவரி 21 முதல் மார்ச் 10-ம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதன்மூலம் 16 லட்சத்து 88,388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அதன்படி, கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம் பூவானிக்குப்பம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் திடீர் காலனி கிளைக் கழகத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தல் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் வெங்கடாஜலபதி தேர்தலை நடத்தி வைத்தார்.

இந்தக் கிளைக்கழகத்தில் 100 சதவீதம் பெண்களே நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடைபெற்ற தேர்தலில் அவைத்தலைவராக குணசுந்தரி, செயலாளராக பன்னீர்செல்வி, துணை செயலாளராக திலகம், பொருளாளராக உமாமகேஸ்வரி, மேலவை பிரதிநிதியாக மீனாட்சி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிளைக்கழக நிர்வாகம் 100 சதவீத பெண் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தக் கிளைக் கழகம் பெண்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதை அதன் வெற்றியாகவே கருதுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: "அரியலூர் மாவட்டத்தை வேளாண் மண்டலத்தில் இணைக்க வேண்டும்” - தி.மு.க மாவட்ட செயலாளர் வலியுறுத்தல்!