DMK

“இளைஞரணியினருக்கு சட்டமன்றத் தேர்தலில் அதிக வாய்ப்பளிக்க வேண்டும்” - திருச்சி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தி.மு.க சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டுக்கு தி.மு.க தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றுள்ளார்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டின் துவக்க நிகழ்வாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு தி.மு.க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இந்த மாநாட்டில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், மக்களின் பிரதிநிதிகளாக எவ்வாறு திறம்படச் செயல்படுவது என்பது பற்றியும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பணிகள் குறிப்பிடப்பட்ட புத்தகங்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திடீரென பேச அழைத்தார் முதன்மை செயலாள கே.என்.நேரு. பேசி முடித்த பின்னர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீர வாள் பரிசாக அளித்தார் கே.என்.நேரு.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகளவில் வாய்ப்புகளைத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மாநாட்டு அரங்கிலும் பலத்த வரவேற்பு எழுந்தது.