DMK

முரசொலி விவகாரம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது - ஆர்.எஸ்.பாரதி எம்.பி அறிக்கை!

ஊடகங்களில், எஸ்.சி.,/எஸ்.டி. ஆணையத்திலிருந்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 7-1-2020 அன்று டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்று நோட்டீஸ் வந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது திசை திருப்பும், நோக்கத்தோடு பாரப்பப்பட்ட தகவல் என முரசொலி அறக்கட்டளை அறங்காவலரும், எம்.பியுமான ஆர்.எஸ் பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ முரசொலி இடம் தொடர்பாக ஏற்கனவே இந்த ஆணையத்திலிருந்து வந்த நோட்டீசின் அடிப்படையில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையில் நான், ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் 19-11-2019 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி, முரசொலி அறக்கட்டளையின் சார்பாக விரிவான முதனிலை ஆட்சேபணை தெரிவித்தேன். அதேநேரத்தில், புகார் கொடுத்தவரான சீனிவாசனும், தமிழக அரசும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வாய்தா வாங்கிச் சென்றது அனைவரும் அறிந்ததே!

அதனைத் தொடர்ந்து, நான் செய்தியாளர்களைச் சந்தித்து முரசொலி இடம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் விரிவாக எடுத்துக் கூறியது, அனைத்து ஊடகங்களிலும் - பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து, புகார்தாரர் சீனிவாசன்மீது சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கதாகும்.

இந்நிலையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ஏதோ புதியதாக நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக, ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளிவருகின்ற செய்திகள் அனைத்தும், திசைதிருப்பும் நோக்கத்தோடு - அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.