DMK

"தாய்க்கழகத்தில் இணைந்திருக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த பி.டி.அரசகுமார்!

தமிழக பா.ஜ.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்த பி.டி.அரசகுமார், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வில் இணைந்தார்.

சமீபத்தில், புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு இல்லத்திருமண விழாவில், பேசிய பி.டி.அரசகுமார், “தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக அவர் விரைவில் பொறுப்பேற்பார்” எனப் பேசினார். பா.ஜ.க மாநில துணை தலைவராகப் பொறுப்பு வகித்த நிலையில் பி.டி.அரசகுமார், தி.மு.க தலைவரைப் புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் பி.டி.அரசகுமார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி.அரசகுமார், “புதுக்கோட்டை திருமண விழாவில் உண்மையைத்தான் யதார்த்தமாக வெளிப்படுத்தினேன். தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை எதிர்கொண்டேன்.

மனம் சோர்ந்து இருந்த நேரத்தில் தற்போது தி.மு.க-வில் இணைந்துள்ளேன். இன்னும் சில காலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமையும். அதற்காக நான் உழைப்பேன். பா.ஜ.க தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை. தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் தி.மு.கவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமியின் பெரியம்மா மகனும், சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான விஸ்வநாதன், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக்கொண்டார்.

Also Read: "அ.தி.மு.க அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே தேர்தல் ஆணையத்தை நடத்தலாம்” - மு.க.ஸ்டாலின் தாக்கு!