DMK

“மோடி ஆட்சியே வாயில் வடை சுடும் ஆட்சி தான்” - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மறைந்த தி.மு.க முன்னோடிகளுக்கும், கேரளா, நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்கு இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஆர்.டி. சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ''செப்டம்பர் 14 முதல் நவம்பர் 14 வரை தமிழகம் முழுவதும் இளைஞர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்படும். 2 மாதங்களில் தொகுதிக்கு 10 ஆயிரம் இளைஞர்களைச் சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்க்கைக்காக புதிய மொபைல் ஆப் உருவாக்கப்படும்.

இளைஞரணியில் 18 முதல் 35 வயது வரை உறுப்பினராக சேரலாம் என சில மாற்றங்களைச் செய்துள்ளோம். தி.மு.க தலைவரின் மகன் என்பதால் என் மீது எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்பார்ப்பை நிறைவேறறுவதற்கான ஒரே வழி செயல்பாடு தான்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் தூர்வாரப்படாத ஏரிகள், குளங்கள் தி.மு.க இளைஞர் அணி சார்பில் தூர்வாரப்படும். அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க இளைஞரணியின் பங்கு எப்போதும் மேலோங்கி இருக்கும். தி.மு.க கூட்டணி தொடர்ந்து தோழமையுடன் தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.

நாட்டில் கடுமையான பொருளாதார தேக்க நிலை நிலவும் சூழலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மோடி ஆட்சியே வாயில் வடை சுடும் ஆட்சி தான்” எனத் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.