DMK

‘ விமர்சனங்களை எதிர்கொண்டு இலக்கை நோக்கி பயணிப்போம் ’ - இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிக்கை !

தி.மு.க.,வின் வலுவான அடித்தளம் கண்ட இளைஞர் அணியை கலைஞரின் வழிகாட்டுதலோடு உருவாக்கியவர் தலைவர் மு.க ஸ்டாலின். ஜூலை 20, 1980ல் மதுரையில் உதயமானது கழக இளைஞரணி இன்று 40ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

“நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்;

எங்கள் கால்கள் நடையை நிறுத்தா.

நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்;

எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா.

நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்;

எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா.

காரணம், நாங்கள் ஆழமான கொள்கைக்கு சொந்தக்காரர்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்.

அறிஞர் அண்ணாவின் தம்பிமார்கள்.

அந்த தொண்டர் படையிலே தான்,

அந்த தம்பிமார்களின் வரிசையிலே தான்,

இன்று இளைஞரணியும் சேர்ந்திருக்கிறது.’’ என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

1980ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 20ஆம் நாள், மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இயக்கத்தின் இதயமாக சொல்லப்படும் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது.

நாற்பதாவது ஆண்டை இளைஞரணி தொடும்போது, அதனுடைய செயலாளர் பொறுப்பை சுமக்கும் கடமை, எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து, ஒரு பக்கம் பெருமைப்படுகிறேன். இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. பெருமைக்கு என்ன காரணம் என்பதை நான் சொல்லத் தெரியவில்லை. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இருந்து செயல்பட்ட பொறுப்பு இது. இதைவிட பெருமை எனக்கு என்ன வேண்டும்?

ஏன் மலைப்பாக இருக்கிறது என்றேனென்றால், கடந்த 40 ஆண்டு காலமாக இளைஞரணியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை செதுக்கி, அசைக்க முடியாத கற்கோட்டையாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அதனை மேலும் கட்டிக்காக்கும் பொறுப்பு, என் கையில் வந்து சேர்ந்துள்ளது.

தளபதி மு.க. ஸ்டாலின், பரபரப்புடனும், எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் வெள்ளக்கோயில் சுவாமிநாதன் அவர்கள் இளைஞரணியை நடத்திச் சென்று, எனக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். இவர்களது வழிகாட்டுதலுடனும், இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஒத்துழைப்புடனும் எனது பயணம் தொடங்குகிறது.

தி.மு.க என்ற இயக்கமே, இளைஞர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான். 1949ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்களின் வயது 40. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வயது 25. கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு அப்போது வயது 27. இப்படி ஒவ்வொரு முன்னணியினரையும் வரிசைப்படுத்த முடியும். அதனால் தான், இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இளைஞர் இயக்கம் என்கிறேன்.

இந்த இளைஞர் சக்தி தான், கொட்டும் மழையில் உருவான இயக்கத்தை நாடு முழுவதும் வளர்த்து அசைக்க முடியாத ஆலமரமாக காட்சியளிக்க வைத்துள்ளது. இயக்கத்தின் வேர் ஆழமானது. கிளைகள் விரிந்து பரந்தது. யாராலும் எளிதில் அசைக்க முடியாதது. அதனால் தான், இன்று பலருக்கும் நம் கழகத்தைப் பார்த்தால், வயிற்றெரிச்சல்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றவை. மனதை திடப்படுத்துபவை. இந்த விமர்சனங்களுக்கான ஒரே பதில் ‘’செயல்’’ மட்டுமே என்று தளபதி ஸ்டாலின் அடிக்கடி சொல்வார்கள். அந்த அடிப்படையில் எங்களது இளைஞரணி தனது அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டின் மூலமாக இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்.

நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்று தான். தமிழ்நாட்டில் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்க கிளம்பியிருக்கும் இளம்படையினருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞரணியின் அலுவலகம் செயல்படுவது ‘அன்பகம்’

கழகத்தின் தலைமையகம் செயல்படுவது ‘அறிவாலயம்’

அன்பும் அறிவும் நம் இரு கண்கள்.

நாம் நடந்து கொண்டே இருப்போம். இளைஞரணியின் தொடக்க விழாவின்போது, “ ஆழமான கொள்கைக்குச் சொந்தக்காரர்கள், பெரியாரின் தொண்டர்கள், அண்ணாவின் தம்பிகள்’’ என்ற மூன்று அடையாளங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். 40 ஆண்டுகள் கழிந்த நிலையில், மேலும் இரண்டு அடையாளங்கள் கிடைத்துள்ளது நமக்கு. நாம், “கலைஞரின் கண்மணிகள், தளபதியின் தளபதிகள்’’. நாம் நடந்து கொண்டே இருப்போம்!

என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.