DMK

மிகச்சிறந்த நிர்வாகி என நிரூபித்துப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின்!

கோடிக்கனக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.கழகத்தில் கடைசி தொண்டன் நான் எனத் தன்னை இணைத்துக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அவரது சீரிய நிர்வாகத் திறனைக் கண்டு கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியை நிர்வகிக்கும் பொறுப்பு தலைவர் கலைஞரால் உதயநிதிக்கு 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

தி.மு.க-வை பின்பற்றுபவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பதை அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி என அனைவரும் நிரூபித்துள்ளனர். அவர்களின் வழியில் உதயநிதியும் மிஞ்சவில்லை என்பதற்கு ஏற்றாற்போல 2011-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் உருவான ‘ஆதவன்’ படத்தின் மூலம் திரையில் தோன்றி, சினிமா உலகிலும் தன்னை நிலைநாட்டிக்கொண்டுள்ளார்.

இளைஞர்களிடையே கொண்டாடப்படக் கூடிய நபராகத் திகழ்ந்து வரும் உதயநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்று எளிய மக்களை சந்தித்து வந்தார். அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் வெற்றிக்காகவும், தமிழக மக்களின் விடியலுக்காகவும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

உதயநிதியின் மேடைப் பேச்சுகளால் ஆளுங்கட்சியே ஆட்டம் கண்ட நிகழ்வுகள் ஏராளம். உதாரணத்துக்கு, உதயநிதி பொய் உரைக்கிறார் என பல மேடைகளில் பதற்றத்துடன் பிதற்றினார் பா.ம.கவின் அன்புமணி. அதுமட்டுமல்லாமல், முதலமைச்சர் பழனிசாமியும் பிரச்சாரத்தில் உதயநிதியின் பேச்சுக்கு பதிலளிக்கும் நெருக்கடிக்கு ஆளானார்.

“அரசியலோடு பிறந்தவன்; அரசியலைப் பார்த்து வளர்ந்தவன்; எனக்கு அரசியல் புதிதல்ல” என்று சொல்லும் உதயநிதி, தாத்தா கலைஞருக்காகவும், தந்தை தளபதிக்காகவும், இவ்விருவரின் படை வீரர்களுக்காகவும் பிரசாரத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

இதனை உணர்ந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், இளைஞரணி நிர்வாகிகளும், மக்களும் ‘உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும்’ என கடந்த மாதமே தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகோள் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் ’இளைஞரணி செயலாளர்’ என்ற பொறுப்பை உதயநிதி ஸ்டாலினுக்கு அளித்திருக்கிறார் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்.

இதன் மூலம், எதிர்வரும் காலங்களில் உதயநிதி ஸ்டாலினின் பிரசார உத்திகளும், உழைப்பும் திராவிட முன்னேறக் கழகத்துக்கு பெரும் பலமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.