DMK

தி.மு.க விருட்சம் என்றால், இளைஞரணி அதன் ஆணி வேர் - தி.மு.க இளைஞர் அணி உருவான கதை !

தி.மு.க இளைஞரணி செயலாளராக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தி.மு.க தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க பறந்து விரிந்த விருட்சம் என்றால், இளைஞரணி அதன் வேராக ஆரம்பகாலம் தொட்டே இருந்திருந்திருக்கிறது. அதை இன்னும் வலுப்படுத்தவே உதயநிதி ஸ்டாலின் களமிறக்கப்பட்டுள்ளார். அதனை தன் வியர்வையும், குருதியும் சிந்தி, உருவாக்கியவர் தி.மு.கழகத்தின் தலைவர் ஸ்டாலின். எனவே, உதயநிதிக்கு இது வெறும் பொறுப்பல்ல; தன் ரத்த பந்தம்.

தி.மு.க இளைஞர் அணி உருவான கதையைப் பார்ப்போம் :

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தனது மாணவப் பருவத்தில் தன் வீடு இருந்த கோபாலபுரம் பகுதியில் இருந்த மாணவர்களை ஒருங்கிணைத்து அப்பகுதியில் இருக்கும் முடிதிருத்தும் கடையொன்றை தங்கள் இடமாகக் கொண்டு உருவாக்கியது தான் இன்றைய தி.மு.க இளைஞரணி. அந்த வயதில் ஸ்டாலின் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’. அந்த அமைப்பின் மூலமாக தேர்தல் பிரசாரம், கொள்கைப் பாடல்கள் பிரசாரம் மேற்கொள்ளும் பணிகள் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. தனது சைக்கிளில் ஒலிப்பெருக்கியைக் கட்டிக்கொண்டு, வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.

இந்தியாவில் முதன்முறையாக...

பின்னர், 1980 ஜூலை 20 ஆம் தேதி மதுரை, ஜான்சிராணி பூங்காவில் “திமுக இளைஞரணி” தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சியொன்றின் சார்பில் இளைஞர் அணி எனத் தனிப்பிரிவைத் தொடங்கிய முதல் கட்சி தி.மு.க தான்.1982 ஆகஸ்ட் மாதம் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், கழக இளைஞரணி அமைப்புக்குழு உறுப்பினர்களாக மு.க ஸ்டாலின் , திருச்சி சிவா,வாலாஜா அசன், இளம்வழுதி, மற்றும் தாரை மணியன் நியமிக்கப்பட்டார்கள்.

இளைஞரணி செயலாளர் மு.க ஸ்டாலின்

பின்னர், 1983ம் ஆண்டில், மு.க. ஸ்டாலின் கழகத்திற்காக ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி, அவரை தி.மு.க இளைஞரணியின் செயலாளராக நியமித்தார் தலைவர் கலைஞர். திருச்சி சிவா, மற்றும் தாரை மணியன் துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு முதல் மாவட்ட வாரியாக இளைஞர் அணிக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இளைஞர் அணியின் பயணம்

தி.மு.க இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த கழகப் பணிகள் வழங்கப்பட்டதால், அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரான வெள்ளகோவில் மு.பெ. சாமிநாதன் 2017ல் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2 வருடங்களில் அவர் அந்தப் பணியை திறமையாக மேற்கொண்டார். நடைப்பெற்று முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

செயலாளரான உதயநிதி

இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் ஆக உதயநிதி ஸ்டாலின் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். உதயநிதியின் நியமனம், ஆளும் அடிமை அ.தி.மு.க மற்றும் பாசிச பா.ஜ.க ஆட்சியில் மிக முக்கியம் வாய்ந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அவர் கழகத்தை இளைஞர்களிடம் பெரிய அளவில் கொண்டு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.