DMK

தலைவர் மு.க ஸ்டாலினை முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதே எனது லட்சியம் - உதயநிதி 

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் சிலைகளைத் திறந்து வைத்தார். முன்னதாக அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 100-வது பிறந்தநாளையொட்டி நேற்று காலை அவரது சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து, கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதற்கு தொன்னூர் உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில், முரசொலி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்களும் கழக மூத்த நிர்வாகிகளுமான கே.என் நேரு எம்.எல்.ஏ, ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் எம்.பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்ட மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், மக்களவைத் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள பிரமாண்ட வெற்றியைக் கண்டு தற்போது வாயடைத்து போயுள்ளனர். வரலாறு காணாத வெற்றியை அளித்து தற்போது கெத்தாகவும், கம்பீரமாகவும், ஸ்டைலாகவும் அமர்ந்திருக்கிறார் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். கலைஞரின் மகன், எனக்கு அப்பா, இதற்கு மேலும் உங்களில் ஒருவராக உள்ள தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி” எனக் கூறி புகழாரம் சூட்டினார்.

மேலும், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும்தான் கழக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ததாகவும், தி.மு.க.,வில் எனக்கு மிகப்பெரிய பொறுப்போ, பதவியோ கொடுக்க இருக்கிறார்கள் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் உலா வருகிறது.

ஆனால், முந்தைய காலங்களில் முத்தமிழறிஞர் கலைஞருக்காக துறைமுகம் தொகுதியிலும், தலைவர் ஸ்டாலினுக்காக ஆயிரம் விளக்கு தொகுதியிலும் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்ததுண்டு. அதேபோல், கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூரில் போட்டியிட்ட எனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக பிரசாரம் செய்திருக்கிறேன். தற்போது மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள பெரிதும் உதவிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முரசொலியின் நிர்வாக இயக்குநராக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. ஏனெனில் கலைஞர் அவர்களால் அளிக்கப்பட்ட பொறுப்பு அது என்று கூறிய அவர், தி.மு.கழகத்தில் பதவியோ பொறுப்போ எதிர்ப்பார்த்து பிரசார பணிகளில் ஈடுபடவில்லை.

கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன், நடிகர், முரசொலி நிர்வாக இயக்குநர் இவற்றையெல்லாம் விட, தி.மு.கழகத்தின் கடைக்கோடி தொண்டனாக இருப்பதே போதும்” என நெகிழ்ச்சியாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் போன்று, சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கழகத்தை வெற்றி பெறச் செய்து தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைப்பதே என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக நான் கருதுகிறேன்.

அதேபோல் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் வீடு வீடாகச் சென்று தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன். மேலும், மக்களவைத் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றி நாடு முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க பெற்ற வெற்றிக்கு மோடியின் எதிர்ப்பலை காரணமாக இல்லை தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆதரவு அலையே காரணம்” என்று உதயநிதி குறிப்பிட்டார்.