Cinema
மலையாள திரையுலகை உலுக்கும் பாலியல் விவகாரம் : இயக்குநர் ரஞ்சித் மீது இளைஞர் புகார் - மேலும் ஒரு வழக்கு!
மலையாள திரையுலகேயே தற்போது உலுக்கி வரும் நடிகைகள் மீதான திரை பிரபலங்களின் பாலியல் அத்துமீறல் விவகாரம் இந்திய திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் மூலம் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.
பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகைகள் சிலர் வெளிப்படையாக புகார்கள் வைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகையும் மாடல் அழகியுமான ரேவதி சம்பத், கடந்த 21 ஆண்டுகளுக்கு முன், தான் அறிமுக நடிகையாக திரைத்துறைக்கு வந்தபோது, நடிகர் சித்திக் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வால் தனது 16 வயதில் தான் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் ரேவதி சம்பத் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குநர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், இதனால் அன்று இரவே வாய்ப்பை உதறிவிட்டு கொல்கத்தா திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார்களை தொடர்ந்து அடுத்தடுத்து என நடிகைகள் திரை பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குநர் ரஞ்சித் மீது இளைஞர் ஒருவரும் புகார் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை அளித்ததாக இயக்குநர் ரஞ்சித் மீது பரபரப்பான புகாரை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கோழிக்கோடு போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே நடிகைகள் கொடுத்த புகாரின் பேரில் இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இயக்குநர் ரஞ்சித் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!