Cinema
“தமிழ் திரையுலகை மீட்டெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி...” - தென்னிந்திய நடிகர் சங்கம் !
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு பல்வேறு மகத்தான அறிவிப்புகளை வெளியிட்டது. அப்போது சென்னையில் 150 ஏக்கரில் புதிய சினிமா நகரம் அமைக்கவும், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கூடிய படப்பிடிப்பு தளங்கள், படத்தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்காகவும் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ் திரை சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அதன் தலைவரும் நடிகருமான நாசர் அறிக்கை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கை பின்வருமாறு :
“சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள தமிழ் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்ஷன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாக பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாக திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது.
காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரிய செய்கின்ற திட்டமிது. தமிழ் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.”
முன்னதாக தமிழ் திரையுலகம் சார்ந்த பணிகளுக்கு ரூ.500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று BUDGET கூட்டத்தொடரில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!