Cinema

“விஜயகாந்தை சினிமா உலகம் ஏன் இப்படி கொண்டாடுகிறது..?” - இணையத்தில் வைரலான பதிவு !

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் தனது 71-வது வயதில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகம், இந்திய அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் தற்போது அவரது உடல் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் மறைவுக்கு இணையம் வாயிலாகவும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இணையவாசி ஒருவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்பா என்ற இணையவாசியின் X வலைதள பதிவு பின்வருமாறு :

"அப்படி என்ன செய்துவிட்டார்? ஏன் சினிமா உலகம் விஜயகாந்தை இப்படி கொண்டாடுகிறது..?

படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவம். அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு, சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க செய்தது விஜயகாந்தின் நல்ல மனது. இந்த மனதை தான் கொண்டாடி தீர்க்கிறது தமிழ் சினிமா.

விஜயகாந்த் வீட்டில் வழங்கப்படும் உணவு என்பது விருகம்பாக்கம் பக்கத்தில் வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குநர்கள் பலருக்கும் கிடைத்த வர பிரசாதம். இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருக்கும் இயக்குநர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள் என்பது விஜயகாந்த் புகழ் தமிழ் சினிமாவில் இன்னும் நிலைத்திருக்கும் முக்கிய காரணம்.

டிஎப்டி படித்துவிட்டு திரைப்படங்கள் இயக்கும் கனவோடு இருக்கும் கோடம்பாக்கத்தில் திரிந்த பல இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கொடுத்த ஒரு கனவு பட்டறை காவலான திகழ்ந்த ஒரே நடிகர் விஜயகாந்த். வெற்றி பெற்ற இயக்குநர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநர்கள் பலரையும் உருவாக்கியதில் விஜயகாந்தின் பங்கு அளப்பரியது.

நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் தொடர்ந்த போது, தனது நூறாவது படமாக 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கி மிரட்டியது விஜயகாந்தின் ரசிகர் படை. விஜயகாந்தின் சாதனைகளை பேசும் பொழுது அனைவரும் தவறாமல் குறிப்பிடுவது நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்ட கதை. ஒரு பாகுபலி கதை போல விஜயகாந்தின் இந்த கதையை சொல்ல பல காரணங்கள் இருக்கிறது.

நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்டு சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டு வந்த நடிகர் சங்கம் கடனில் மூழ்கி இடம் திவால் ஆகும் பொழுது, ஹபிபுல்லா ரோட்டில் இருக்கும் இவ்வளவு பெரிய இடம் கடனில் முழுகுவதா? என களத்தில் இறங்கி கலை நிகழ்ச்சி நடத்தி கடனை அடைத்து சங்கத்திற்கு நிதியை செய்தது விஜயகாந்தால் மட்டுமே அந்த காலகட்டத்தில் செய்ய முடிந்த சாதனை.

திரை நட்சத்திரங்களில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி, கமல் உள்ளிட்ட ஒரு பெரும் படையை மலேசியா, சிங்கப்பூர் அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலமாக வசூல் செய்த விஜயகாந்தின் சரித்திர சாதனையை தமிழ் சினிமா இருக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கும் அளவிற்கு நடிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விட்டார் விஜயகாந்த்."

Also Read: சிவாஜி TO கமல்... யாரும் பிடிக்காத இடத்தை பிடித்த விஜயகாந்த் : 100-வது படத்தில் கிடைத்த 'கேப்டன்' பட்டம்!