Cinema

“Costume TO MakeUp Department.. அதான் மோடி இருக்கிறாரே” - நடிகர் குறித்த கேள்விக்கு பிரகாஷ்ராஜ் நக்கல் !

இந்தியாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர்தான் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான இவர், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு ஒருபுறம் சமூக சேவை செய்து வந்தாலும், அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார்.

குறிப்பாக பாஜக, பிரதமர் மோடி உள்ளிட்டோரின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு உடனடியாக எதிர்வினையாற்றி விமர்சனத்தை முன்வைப்பார். பாஜக மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவு செய்யும், இந்துத்துவ சிந்தனைக்கு எதிராகவும் இருந்து வருகிறார். அதோடு பிரதமர் மோடியின் மக்கள் விரோத செயலுக்கும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்.

கடந்த சில மாதத்திற்கு முன்னர் கூட, பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டார். இவரது அரசியல் கருத்துக்கு பாஜக கும்பல் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மக்கள் பலரும் இவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவரது அரசியல் கருத்துக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தனது அரசியல் கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மோடி ஒரு சிறந்த நடிகர் என்று கருத்து தெரிவித்துள்ளது பலர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியிருக்கும் நிலையில், இணையவாசிகள் பலரும் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தனியார் நிறுவனத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார்.

அப்போது, "நீங்கள் அரசியலில் நீண்ட நாட்களாக இருந்தாலும் தோற்று உள்ளீர்கள். அப்படி என்றால், அரசியலில் உங்களை விட சிறந்த நடிகர்கள் உள்ளனரா?" என்று செய்தியாளர் கேட்டுள்ளார். அதற்கு சற்றும் சளைக்காமல், யோசிக்காமல் பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், "ஆம்... அதான் மோடி இருக்கிறாரே.." என்று நய்யாண்டியாக பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், "பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர். சிறந்த பேச்சாளர்; சிறந்த பெர்ஃபார்மர். அவர்தான் மேக்-அப் டிபார்ட்மென்ட், காஸ்டியூம் டிபார்ட்மென்ட், ஹேர் ஸ்டைல் டிபார்ட்மென்ட் என எல்லாம் வைத்திருக்கிறாரே." என்று நக்கலாக பதிலளித்தார். இவரது பதில் தற்போது இணையத்தில் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.

Also Read: “இலவசங்களைக் கேலி செய்த மோடி, இப்போது இலவச அறிவிப்புகளை அள்ளி விடுவது ஏன்?... பயமா?” - கி.வீரமணி தாக்கு!