Cinema

“கிச்சனில் நின்று அம்மாவிடம் பேசுவது இன்னும் நெருக்கமானது..” : இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள் பகிர்வு!

திரையுலகில் பொல்லாதவனாய் நுழைந்து வெள்ளி திரைக்களத்தில் ஆடுகளமாக திகழ்ந்து விசாரணையில் விருது பெற்று, இயக்குநர்களின் அசுரனாய் தோன்றி வடசென்னை பயணத்தில் சரித்திரம் படைத்தது மலைவாழ் மக்களின் விடுதலையை உலகெங்கும் அறியச்செய்தவர் தான் இயக்குநர் வெற்றி மாறன்.

திரைத்துறையில் அனைவராலும் பேசப்படும் முன்னணி இயக்குநரிகளில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்கிறார். அவருடைய படைப்புகளால் தமிழ் சினிமா ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். தமிழ் சினிமாவை விருதுகளால் நினைய வைத்து இந்திய அளவில் பலரும் அண்ணாந்து பார்க்கும் வகையில் திரைப்படங்களை எடுத்து அசுர இயக்குநராக வலம் வருகிறார்.

தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான தீராக்காதல் கொண்டவர் வெற்றிமாறன். ஆனால் அத்தகைய காலகட்டத்தில் அதை வெளிப்படுத்துவதற்கும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தை சொல்வதற்கும் அவருக்கு துணிச்சல் இல்லாமல் போகிவிட்டது. அப்போதும் கூட மஞ்சள் காமாலை வந்தாலும் பரவாயில்லை என்று சினிமா மீது இருக்கும் ஆர்வத்தில் திரையரங்கம் சென்று படம் பார்த்தவர் தான் வெற்றிமாறன்.

இராணிப்பேட்டையில் பள்ளி படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்தில் காதல் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்பு இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், அவரது ஆஸ்தான சீடர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

ஃபாதர் ராஜநாயகம் மூலம் இயக்குனர் பாலு மகேந்திராவை முதன்முதலில் டிசம்பர் 26, 1997 அன்று அவர் அலுவலகத்தில் சந்தித்தார். அங்கு அவர் முதன்முதலில் சந்தித்த நபர் நா.முத்துக்குமார். அவர் தான் அங்கு வெற்றிமாறனுக்கு சீனியர் மற்றும் நண்பராகவும் அறிமுகமானார். பாலு மகேந்திரா வெற்றிமாறனை வெட்டி என்று செல்லமாக அழைப்பாராம்.

ஆடுகளம் படத்தில் வசனம் எழுதியவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஆனால் ஆரம்பத்தில் பாலு மகேந்திராவின் அலுவலத்திற்கு வெற்றிமாறன் சென்றபோது உள்ளே நுழைய மறுத்தவரும் இவர்தான். அன்று அப்படி சொன்னவர், பிற்காலத்தில் வெற்றிமாறனுக்காக நான் எழுதித்தருகிறேன் என்று தாமாகவே முன்வந்து வசனங்களை எழுதினார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

கிராம்பாபுரங்களில் நடக்கும் சேவல் சண்டையை மையமாக வைத்து அங்கு இருக்கும் மனிதர்களின் தேவைகளின் வெளிப்பாடுகளை 'ஆடுகளம்' திரைப்படம் மூலம் அழகாக திரையில் காட்சிப்படுத்திருப்பர் இயக்குனர் வெற்றிமாறன்.

அதில் படத்தில் கருப்புக்கும் பேட்டைக்காரனுக்கும் இடையே ஈகோ சண்டை நடக்கும் காட்சிகள் அமைந்திருக்கும். அது பாலுமகேந்திராவுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நடந்த ஈகோ சண்டையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என சினிமா வட்டாரங்களில் பலரால் பேசப்பட்டது. இப்படத்தின் மூலம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சேர்த்து ஆறு தேசிய விருதுகளை பெற்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஆடுகளம் படத்திற்கு முன்னதாகவே தனுஷ் வெற்றிமாறன் காம்போவில் வெளியான திரைப்படம் தான் 'பொல்லாதவன்'. 2007ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முதல் படம் என்பதால் படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தாலும் அவருக்கு இணையாக இந்த படத்தில் கவனம் பெற்றது ஒரு பைக்கை தான் வைத்திருந்தார்.

ஒரு சராசரி இளைஞனின் பைக் திருடுபோவது, அதன் பின்னணியில் இருக்கும் கஞ்சா கடத்தல் மாஃபியா அவர்களுக்கும் இந்த இளைஞனுக்கும் நிகழும் மோதல் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் கமர்ஷியல் படமாகவே ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை உருவாக்கியிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்த படத்தில் ஒரு தெருவில் கரண்ட் போனதும் இருட்டுக்குள் வைத்து தனுஷ் நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை காட்டியிருப்பார். இந்த சீன் நிஜத்தில் வெற்றிமாறனுக்கும் அவரது மனைவிக்கும் நடந்தவை என சொல்லியிருக்கிறார். அக்காலத்தில் வெற்றிமாறன் அவரது மனைவி ஆர்த்தியுடன் நெருக்கமாக இருக்க முயன்ற எல்லா தருணங்களுமே சொதப்பலில் தான் முடிந்திருக்கின்றன. அதை திரையில் தன் காதலை வெளிப்படையாக காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். குறிப்பாக இந்த திரைப்படத்தில் வட சென்னையின் பிரத்யேக தமிழ் ஸ்லாங்கை சிறப்பாகவும், இயல்பாகவும் அமைத்திருப்பார்.

அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படத்திற்காகவும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். காவல்துறை வன்முறையை பற்றி பலராலும் படம் தான் விசாரணை. எம்.சந்திரகுமார் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தான் தவறுதலாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகளை முன்வைத்து எழுதிய ‘லாக்கப்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் விசாரணை திரைப்படம்.

இவரின் படங்களின் எடிட்டிங் வேலைகள் வித்தியாசமாகவும் தரமாகவும் இருப்பதற்கு காரணம் பாலு மகேந்திராவிடம் கற்றுக்கொண்ட எடிட்டிங் திறமையே ஆகும். விசாரணை படத்தின் மூலக்கதையான லாக்கப் நாவலை வெற்றிமாறனுக்கு கொடுத்தவர் ஞானசம்பந்தன் என்கிற தங்கவேலவன். வெற்றிமாறனுக்கு அண்ணன் கிடையாது என்பதால் இயக்குனர் தங்கவேலவனை தன்னுடைய அண்ணனாக தான் பார்ப்பாராம். வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் இந்திய அளவில் போட்டி பிரிவுக்கு தேர்வான முதல் தமிழ் திரைப்படம் இவர் இயக்கிய விசாரணை மட்டும் தான்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போவில் இணைந்து உருவாக்கிய மூன்றாவது திரைப்படம் தான் வடசென்னை. வடசென்னையில் இருக்கும் ரவுடிசம், அதில் இருக்கும் அரசியல் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தத்ரூபமாக வெளிப்படுத்திருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். வடசென்னை முதல் பாகம் 1970களில் நடக்கும் கதைக்களத்தை கொண்டுள்ளது. வடசென்னை மக்களின் இயல்பை அன்றாட வாழ்வையும் திரையில் சற்றும் குறையில்லாமல் காட்சிப்படுத்திருப்பார் வெற்றிமாறன்.

படம் முழுவதும் தோன்றும் ஏராளமான கதாபாத்திரங்கள் அவர்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை திரையரங்கில் குதூகலமாகினர். படத்தில் ஆரம்பகட்டத்தில் தனுஷிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் இடையிலான காதலை பார்த்து ஐஸ்வர்யாராஜேஷின் தம்பி கோவப்படும் காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாக தோன்றித்தன. உண்மையில் வட சென்னையிலிருந்த கடந்த கால உலகத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வரலாற்றை மூன்று பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டுருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்த படத்தின் அடுத்த பாகத்தில் அன்புவின் எழுச்சி குறித்து அதிக எதிர்பார்ப்புகளோடு காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் இப்போதைக்கு இல்லை என ஓர் தனியார் நிகழ்ச்சியில் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் காம்போவில் நான்காவதாக களமிறங்கிய திரைப்படம் தான் அசுரன். இந்த திரைப்படம் முதல்பார்வை வெளியானத்திலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளை பெற்றது. எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கப்பட்டது. வெற்றிமாறன்1960களில் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் சாதியக் கொடுமைகளை பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அவர்கள் மேல் காட்டப்பட்ட வன்மத்தையும் கொடுமைகளையும் காட்டும்வகையில் அழகாக இயக்கிருப்பார் வெற்றிமாறன்.

இறுதியாக இந்த ஆண்டு வெளியானது தான் விடுதலை திரைப்படம். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். மலைவாழ் மக்களின் கொடுமைகளையும் அங்கு பணியில் இருக்கும் காவலர்கள் படும் துன்பங்களையும் அரசியலோடு திரையில் வெளிப்படுத்திருப்பர் வெற்றிமாறன்.

கதையில் வரும் பிரச்னைகளுக்கு வித்திடும் காரணங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவற்றை வெற்றிமாறன் காட்சிப்படுத்தியுள்ள விதம், படம் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்திருப்பார். அதில் அவர் கெட்டிக்காரர் என்றே சொல்லலாம். ஒவ்வோரு அறைக்கும், ஒரு வடிவம் உண்டு; ஒரு வாசம் உண்டு. அந்தந்த அறைகளில் நின்று பேசும்போது வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. மற்ற இடங்களைவிட, கிச்சனில் நின்று அம்மாவிடம் பேசுவது இன்னும் நெருக்கமானது. ஓர் அறையை பற்றி இயக்குனர் வெற்றிமாறன் கூறிய விளக்கம் இது. அப்படியென்றால் அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எத்தகைய ஆழமாய் புரிந்துணர்வு இருக்கும் என்பது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

- ந.வினீத்குமார்.

Also Read: ரஜினிக்கு 6 படம் Flop.. வெற்றிமாறன் படம்.. அனிருத் கடத்தல் : குஷி பட பிரஸ் மீட்டிங்கில் VDK பேசியது என்ன?