Cinema

“ஆஸ்கர் கொடுத்தாலும் வாங்க மாட்டேன்” : TTF வாசனின் இயக்குநர் பேச்சு - கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்!

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த TTF வாசன், இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வரும் இவர், பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாக செல்வது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இப்படியே இவர் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி வந்தார்.

இப்படி அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதாகவும் என பல்வேறு சாலை விதிகளை மீறியதாக அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளில் இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் போலிசுக்கு சவால் விட்டும் பிரபல பத்திரிகையாளர் ஐயப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதற்கு அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் சூழலில் இவர் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் செல் அம் இயக்கத்தில் TTF வாசன் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் TTF வாசனின் அறிமுக பாடலை அனிருத் பாடவுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இந்த படத்தை ரசிகர்கள் டிக்கெட் வாங்கி தியேட்டரில் பார்க்கும்படியும், பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டாம் என்றும் அவர் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். மேலும் இவரது படத்தை நெட்டில் வந்தால் கூட யாரு பார்க்க மாட்டார்கள் என்று பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்றும், இது 100 நாட்களை கடந்து ஓடம் என்றும் இந்த படத்தின் இயக்குநர் செல் அம் பேட்டி அளித்துள்ளது மேலும் நெட்டிசன்களுக்கு கன்டென்டாக மாறியுள்ளது.

இது குறித்து Youtube சேனல் ஒன்றுக்கு செல் அம் அளித்த பேட்டியில், "TTF வாசனின் முகம் கத்தி போல இருக்கும். எனவே இதற்கு அவர்தான் சரி என்று நினைத்தேன். இந்த படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக TTF டான்ஸ், சண்டை என பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அவர் இதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

படத்தில் வேண்டுமானால் அவர் மஞ்சள் வீரனாக இருக்கலாம்; ஆனால் உண்மையில் அவர் ஒரு மாவீரன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். 'மஞ்சள் வீரன்' படம் நிச்சயம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடும். இந்த படத்துக்காக ஆஸ்கர் விருது கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன். காரணம் 'வெள்ளையனே வெளியேறு' என்று அனைவரும் போராடி அவர்களை வெளியேற்றி விட்டு, மீண்டும் அவர்கள் கையால் கொடுக்கும் ஆஸ்கர் விருதை வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் தேசிய விருது கொடுத்தால் வாங்கிக் கொள்வேன்" என்றார்.

இவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலையும், ட்ரோல்களையும் செய்து வருகிறது. 2கே கிட்ஸ்களுக்கு விருப்பமான TTF, ஏற்கனவே பல ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது அவரது படத்தின் இயக்குநரும் சிக்கியுள்ளார்.

Also Read: ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !