Cinema

“ராசி முதல் வரலாறு வரை..” அஜித்தின் 9 முக்கிய பட தயாரிப்பாளர் காலமானார்.. திரை பிரபலங்கள் இரங்கல் !

தமிழில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தனது ஆரம்ப காலத்தில் ராசி, வாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் இவரது சினிமா வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது வாலி' திரைப்படம்.

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் 2 வேடத்தில் நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று அஜித் திரையுலகில் முக்கிய பங்கு வகித்திருந்தது. இந்த படத்தை தயாரித்தவர் தான் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் 1997-ல் வெளியான 'ராசி' படத்தை தயாரித்த எஸ்.எஸ். சக்கரவர்த்தி, பின்னர் அஜித்தின் பல படங்களுக்கு தயாரிப்பாளர் ஆனார்.

ராசியை தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு என 9 படங்களை தயாரித்தார். இதில் சிட்டிசன், முகவரி, வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அஜித் படம் மட்டுமின்றி விக்ரமின் வெளியான 'காதல் சடுகுடு', சிம்பு நடிப்பில் காளை, வாலு வெளியான உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

தொடர்ந்து கடந்த 2009-ல் பன்னீர் செல்வம் இயக்கத்தில் இவரது மகனும் நடிகருமான ஜானி நடிப்பில் வெளியான 'ரேனிகுண்டா' படத்தையும் தயாரித்தார். இந்த படம் ஹிட் ஆன நிலையில் மீண்டும் ஜானி நடிப்பில் 2012-ல் வெளியான '18 வயசு' படத்தையும் தயாரித்தார். ஆனால் இது பெரிதாக பேசப்படாத சூழலில் அதன்பிறகு எஸ்.எஸ். சக்கரவர்த்தி பட தயாரிப்புகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

Johnny

கடந்த ஆண்டு (2022) விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' சீரிஸில் DSP கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சூழலில் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்காப்பட்டிருந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல இயக்குநரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் "நடிகர் அஜித் மற்றும் என் மகன் சிலம்பரசனை வைத்து காளை, வாலு போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்து தனக்கென்று ஒரு வரலாறு படைத்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது மறைவு தமிழ் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு பணிந்த ஒன்றிய அரசு.. பாலியல் புகாரில் பாஜக MP மீது வழக்குப்பதிவு!