Cinema

நடிகை மரண வழக்கு : காதலனுக்கு எதிராக நடிகை வெளியிட்ட வலுவான வீடியோ ஆதாரம்.. போலிஸ் வைத்த செக் !

வட இந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அகன்ஷா துபே. உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த இவர், டிக் டாக் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாவின் வீடியோக்களை பதிவிட்டு வந்த இவருக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

16 வயதிலேயே மாடலாக அறிமுகமான இவர், 17 வயதில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' என்ற போஜ்புரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'முஜ்சே ஷாதி கரோகி', 'வீரோன் கே வீர்', 'ஃபைட்டர் கிங்' உள்பட பல போஜ்புரி படங்களில் நடத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் மற்றொரு போஜ்புரி படத்தில் நடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இவர் படப்பிடிப்பு முடிந்ததும் தனது அறைக்கு சென்றுள்ளார்.

இந்த சூழலில் சம்பவத்தன்று இரவு அகன்ஷா, போஜ்புரி பாடலுக்கு ஆடியிருக்கும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காலை வெகுநேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஹோட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் பதில் வராததால் மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரது மொபைலை சோதனை செய்தபோது, அதில் இறப்பதற்கு சில நிமிட நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த அகன்ஷா கதறி அழுது வீடியோ வெளியிட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில், அந்த வீடியோவில் தனது இந்த முடிவுக்கு தனது முன்னாள் காதலன் சமர் சிங் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அகன்ஷாவின் பெற்றோரும் தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், அவரது முன்னாள் காதலன் சமர் சிங்கை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

அதோடு அவர் தற்போது சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில், வீடியோ ஆதாரம் அமர்சிங்கிற்கு எதிராக அமைந்துள்ளது. எனவே அவருக்கு தண்டனை கிடைக்க அநேக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில், இந்த வீடியோ உண்மையில் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதா? அல்லது அதற்கு முன்னரே எடுக்கப்பட்டதா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், சமர் சிங் உடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

Also Read: யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்