Cinema

“இதனால்தான் நான் இங்கே சினிமா பண்ணுறேன்..” - பாலிவுட்டை ஒப்பிட்டு தென்னிந்திய சினிமாவுக்கு காஜல் புகழாரம்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு திரையுலகில் கால் பதித்த இவர், 2008-ல் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இருப்பினும் தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்த இவர், ராஜமெளலி இயக்கத்தில் 2009-ல் வெளியான 'மகதீரா' (மாவீரன்) படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த திரையுலையும் கவர்ந்தார்.

இந்த படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், அவ்வப்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் பெரும்பாலும் இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனாலே இவர் தென்னிந்திய நடிகையாக கருதப்படுகிறார்.

தமிழில் கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இந்த ஆல் அழகுராஜா, விஜயுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா, தனுஷுடன் மாறி, சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம், என தமிழ் முன்னணி நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வரும் இவருக்கு, திருமணமாகி அண்மையில் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து இவர் தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், தற்போது தமிழில் 2 படங்களும், இந்தியில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவனம் செலுத்துவதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசினார்.

இது குறித்து அவர் பேசியதாவது, “இந்திதான் எனது தாய்மொழி. இந்தி திரைப்படங்களை பார்த்துதான் நான் வளர்ந்தேன். ஆனால், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு பாலிவுட் திரையுலகில் குறைவு என நினைக்கிறேன். அதனால்தான் இந்தியை விட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன்.

இந்தியை காட்டிலும் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வெளியாகிறது. இந்தி திரையுலகம் என்னை ஏற்றுக்கொண்டு அன்பாக நடந்து கொண்டாலும், தெற்கில் உள்ள தொழில்துறை வழங்கும் சுற்றுச்சூழல், நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் ஒழுக்கத்தை தான் விரும்புகிறேன்" என்றார்.

Also Read: OTT தளங்களில் ஏற்படும் புதிய மாற்றங்கள்.. அமேசானுடன் இணையும் HBO.. விலகும் மற்றொரு நிறுவனம் ?