Cinema

“18 வயது இளைஞருக்கான சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது” : நெறியாளரின் கேள்விக்கு உதயநிதி கொடுத்த பதில்!

தமிழில் பிரபல நடிகராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். நடிப்பு ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என தனது பயணத்தை தொடங்கிய இவர், சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றபின், நடிப்பை விட, அரசியலில் கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்தார். அதன் எதிரொலியாக பின்னர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அமைச்சராக பதவியேற்றபின், நடிப்பில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்னர் இவர் 'கண்ணை நம்பாதே' என்ற படத்தில் நடித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கண்ணை நம்பாதே படத்திற்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர். தொடர்ந்து அண்மையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியது.

கிரைம், த்ரில்லர் ஜானெரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு ப்ரோமோஷன் பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது உதயநிதியிடம் படம் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு கலகலப்பாக பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் ட்வீட் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகாவின் மகனான இன்பநிதியின் புகைப்படம் வெளியானது. சிலர் இதை வேண்டுமென்று பரப்பி தவறாக சித்தரித்தனர். எனவே இதற்கு கிருத்திகா உதயநிதி, "அன்பு செய்யவும், வெளிப்படுத்தவும் அச்சப்படாதே. இயற்கையை அதன் முழுத் தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழியாகும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து நெறியாளர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், "அவருக்கு 18வயது ஆகிவிட்டது. அவருடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட முடியாது. இது பற்றி கேட்க எங்கள் குடும்பத்தை தவிர யாருக்கும் உரிமை இல்லை. அரசியல் பின்னணி கொண்ட குடும்பம் என்பதால் இது போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அதனை தலையில் ஏற்றி கொள்ள கூடாது.

எனக்கும், என் மனைவிக்கும், என் மகனுக்குமான விஷயம் இதை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய லிமிட்டை தாண்டி நானே அந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. இது அவருக்கான சுதந்திரம். அதனால்தான் அவரது கிருத்திகா அந்த ட்விட்டை போட்டார்" எனத் தெரிவித்தார்.

Also Read: RRR படத்தின் இயக்குநர் மோடிதான்னு சொல்ல போறீங்க: மல்லிகார்ஜூன் கார்கே பேச்சால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை