Cinema

“என்ன பார்த்தா மட்டும் எகிறுற.. ஏன்?” : 7 Years Of ‘காதலும் கடந்து போகும்’!

அவன்: ஆமா.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. அது என்ன மத்தவங்களுக்கு முன்னாடி எல்லாம் பூனை மாதிரி பம்முற.. என்ன பார்த்தா மட்டும் எகிறு எகிறுன்னு எகிறுற.. ஏன்?

அவள்: உன்னை பார்த்தா பயம் வரலை?

அவன்: பயப்பட மாட்டீங்க?

அவள்: நான் ஏன் பயப்படணும்?

அவன்: அடிச்சு மூஞ்சிய பேத்துடுவேன் என்ன?

என பாசாங்காக கையை ஓங்குவது. அவள் கொஞ்சம் கூட பதறவில்லை. அவனை கட்டியணைக்கிறாள். அணைத்ததும் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்படும்.

அது மிக மெல்லிய அதிர்ச்சியை உள்ளடக்கிய பெருமூச்சு. அதில் ஆச்சரியமும் கலந்து இருக்கும்.

அந்த காட்சியும் உரையாடலுமே அழகு என்றாலும், அவள் அணைத்ததும் அவனை அறியாமல் வெளிப்படும் அந்த 'ஹ' என்னும் பெருமூச்சு துண்டுதான் என்னை ஈர்த்தது. அந்த பெருமூச்சுக்கு பின் எத்தனை கால தனிமை, ஏக்கம், கழிவிரக்கம் இருந்திருக்கும்?

அந்த எதிர்பார்ப்பை சிறந்த நடிப்பாக கடந்துவிடலாம். விஜய் சேதுபதி கூட இவ்வளவு யோசித்திருக்க மாட்டார் என நீங்கள் கேலி பின்னூட்டம் கூட இடலாம். ஆனால் கலையின் அழகே அதுதானே. கலைந்து போகும் மேகக்கூட்டம் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப கொடுக்கும் உருவம் போல, ஒவ்வொரு படைப்பும் உங்களுக்குள் இருக்கும் ஓர் அடைப்பை திறக்கும்.

அந்த ரவுடியின் வாழ்க்கையில் இழந்த பல சுவாரஸ்ய நிமிடங்களை திரும்ப எடுத்துவிடும் ஒரு நம்பிக்கையை அந்த 'ஹ' வெளிப்படுத்தியிருக்கும். இந்த மாதிரி நம்பிக்கைகளின் சோகமே என்னவெனில், அவற்றின் வாலாக ஒரு அவநம்பிக்கை தொற்றி அலையும். உடைந்துவிடுமோ என தோன்றும் ஒரு தருணம் வாய்க்கும் பாருங்கள், அந்த தருணத்தில் அவநம்பிக்கை பரபரவென மேலேறி குதித்து, உடைத்தே விடும்.

அந்த அவநம்பிக்கை மொத்த வாழ்க்கை கொண்ட அவநம்பிக்கைகளின் நீட்சி. இதுவுமே எதிர்முடிவாக மட்டுமே இருக்க முடியும் என அபரிமிதமாக நம்பிக்கை கொள்ளும் அவநம்பிக்கை. அந்த அற்புதமான தருணத்தை தொடர்ந்து எதிர்பாராத ஒரு சண்டை காட்சி நடக்கும். அவனின் ரவுடித்தனம் வெளிப்படும். அதை அவளும் அவள் பெற்றோரும் பார்த்துவிடுவார்கள்.

அவர்கள் தன்னை பார்ப்பதை கண்டதும், அவன் நெக்குறுகி, கண் கலங்கி, அவளை பார்த்து லேசாக தலையாட்டுவான். லேசாகத்தான். 'இவ்ளோதான் நான். இதெல்லாம் நமக்கு செட் ஆகாது' என பொருள் பேசும் இடம். அப்படியே திரும்பி அந்த அற்புத தருணம் தந்த அவளிடம் இருந்து விலகி, அவன் கட்டி வைத்திருக்கும் அவநம்பிக்கை கோட்டையை நோக்கி நடப்பான்.

நம்பிக்கை என்னும் காந்தபுலம் தாண்டிய எல்லைக்கும் அவநம்பிக்கை என்னும் பெரும் காந்தத்துக்கும் இடையேயான போராட்டம்தான் காதல் என்னும் இந்த விந்தையான உறவு. அந்த விந்தை பற்றிய புரிதல்தான் படத்தின் கடைசியில், காருக்குள் அமர்ந்திருக்கும் அவளை பெட்ரோல் பங்க்கில் பணி புரியும் அவன் பார்த்ததும் இருவரும் பரிமாறிக்கொள்ளும் புன்னகைகளின் அர்த்தம்.

அந்த புன்னகைகளை நாமும் பலரிடம் பல நேரங்களில் பகிர்ந்து கொண்டுதானே வாழ்க்கை என்னும் பெரும் சாகசத்தை புரிந்துகொண்டிருக்கிறோம். அந்த 'ஹ' பெருமூச்சு மட்டும் சிறியதாகவே இருந்துவிடுகிறது.

நீடிக்காமலே தொடர்கிறது!

Also Read: காதலும், கலவியும் வேறு வேறு.. இந்த அடிப்படை புரிதல் கோளாறை காதலர்கள் கடப்பது எப்படி?