Cinema

“சமூக நீதி, சுயமரியாதை, திராவிடத்துக்கு இடமில்லையா?” -‘தமிழா தமிழா’ ஷோவை விட்டு விலகிய கரு பழனியப்பன்

திராவிட இயக்க சிந்தனைகளில் இருக்கும் பிரபலங்களில் முக்கியமானவர்தான் இயக்குனரும் நடிகருமான கரு. பழனியப்பன். காரைக்குடியை சொந்த ஊராக கொண்ட இவர், தமிழ் மீது அதீத பற்றுடையவராக இருக்கிறார். தொடர்ந்து கண்ணதாசன், உள்ளிட்ட எழுத்தாளர்களின் புத்தகத்தை படித்து வளர்ந்த இவருக்கு தமிழ் மீது இதனாலே ஆர்வம் மிகுந்தது.

பேச்சாற்றல் மிக்கவராக இருக்கும் இவர், மேடைகளில், பட்டிமன்றங்களில் எல்லாம் பேசி பிரபலமானார். திரைத்துறையில் தொடக்கத்தில் இவர் பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். தொடர்ந்து 1994-ல் வெளியான ஹவுஸ்புல் படத்தில் சைடு ரோலில் நடித்தார். அதன்பிறகும் சில படங்களில் ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீகாந்த், சினேகா நடிப்பில் வெளியான 'பார்த்திபன் கனவு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய பெயர் கொடுக்கவே சிறந்த இயக்குனருக்கான மாநில விருதையும் வென்றார். தொடர்ந்து விஷாலின் சிவப்பதிகாரம், சேரனின் பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து படங்களை இயக்கினார்.

இவரது இயக்கத்தில் வெளியான 'மந்திர புன்னகை' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். கடந்த 2019-ல் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நட்பே துணை', அருள்நிதி நடிப்பில் அண்மையில் வெளியான 'டி பிளாக்' உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து தற்போதும் படங்களில் நடித்து வரும் இவர், அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.

திராவிட சிந்தனையில் அதீத நாட்டமுடைய இவர், அரசியல் கருத்து குறித்தும் சொற்பொழிவாற்றுவார். அதோடு திராவிட சிந்தனைகளை தொடர்ந்து பேசியும் வருவார். ஒரு பக்கம் திரைத்துறை மறுபக்கம் அரசியில் சிந்தனை என பலரும் இருக்க, அதில் மிக முக்கியவராக கரு.பழனியப்பன் திகழ்கிறார். இவரது பேச்சுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

தொடர்ந்து இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தமிழா தமிழா' என்ற டாக் ஷோவில் நெறியாளராக இருக்கிறார். 'நீயா நானா' ஷோவை போல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த ஷோவில் வாரந்தோறும் ஒவ்வொரு தலைப்பு எடுத்து இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு விவாதிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் 2 குழுக்களும் தங்கள் சிந்தனைகளை அதில் பிரதிபலிப்பர். அதோடு பொது சிந்தனை கருத்து குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதிலிருந்து விலகுவதாக கரு பழனியப்பன் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் என்றால் இதில் இருந்து விலகுவதே இனிது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி..! அன்பு.. முத்தங்கள்.. இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழிகாட்டி இருக்கிறது..

தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!

சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! ... நன்றி.. உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் ! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநரும், நடிகருமான கரு பழனியப்பனின் இந்த அறிவிப்பால் தற்போது திரை வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகை சங்கீதா!