Cinema

சிறந்த 5 இந்தியப் படம்: ஹாலிவுட் ரசிகர்களுக்கு 'வெற்றிமாறன்' படத்தைப் பரிந்துரை செய்த ராஜமௌலி -என்ன படம்?

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் வாங்கியவர்தான் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் ஹிட் அடித்தன. குறிப்பாக மாவீரன், நான் ஈ, பாகுபலி 1 & 2, அண்மையில் வெளியான RRR என அனைத்தும் பெரிய ஹிட்.

இப்படி பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் வாங்கிய இவருக்கு பாகுபலி இந்திய அளவில் அங்கீகாரம் பெற்று தந்த நிலையில், RRR படம் உலக அளவில் அங்கீகாரம் பெற்று தந்துள்ளது. அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இவரது இந்த படத்தை பார்த்து வியந்து தொடர் பாராட்டுகளை தெரிவித்து வந்தார்.

தொடர்ந்து இந்த படம், படத்தின் இடம்பெற்ற பாடல் என அனைத்தும் பல்வேறு விருதுகளை வென்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்திய என தற்போது இந்த ஒரு படம் மூலம் உலக ரசிகர்களை முழுமையாக கவர்ந்துள்ளார் ராஜமெளலி.

இந்த நிலையில் 'தி நியூ யார்க்கர்' என்ற அமெரிக்க பத்திரிகைக்கு ராஜமௌலி பேட்டியளித்திருந்தார். அப்போது சிறந்த இந்திய திரைப்படங்களை பரிந்துரை செய்யுங்கள் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு 5 படங்களின் பெயர்களை கூறியுள்ளார். அதில்,

1. சங்கராபரணம் (1980 - தெலுங்கு- இயக்குநர் கே.விஸ்வநாத் )

2. முன்னா பாய் எம்பிபிஎஸ் (2003 - இந்தி - இயக்குநர் ராஜ்குமார் ஹிரணி )

3. பண்டிட் குயின் (1995 - இந்தி - இயக்குநர் சேகர் கபூர் )

4. பிளாக் ஃபிரைடே (2007 - இந்தி - இயக்குநர் அனுராக் கெஷ்யப் )

5. ஆடுகளம் (2011 - தமிழ் - இயக்குநர் வெற்றிமாறன் ) ஆகிய படங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தமிழ் மற்றும் தனுஷ் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தில் உள்ளனர். முன்னதாக RRR படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு வெற்றிமாறனின் அசுரன் படம் மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.

Also Read: சூடு பிடிக்கும் திருவண்ணாமலை ATM கொள்ளை.. அரியானா விரைந்த போலிஸ்.. கொள்ளை கும்பல் தலைவர் 2 பேர் கைது !