Cinema

பிரபல காமெடி நடிகர் டி.பி.கஜேந்திரன் உயிரிழப்பு.. தொடரும் திரை பிரபலங்களின் மரணம்.. சூழ்ந்த சோகம் !

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் இயக்குநர் டி.பி.கஜேந்திரன். தமிழில் பழம்பெரும் நடிகையான டி.பி.முத்துலட்சுமி இவருக்கு அண்ணி ஆவார். இவரது ஆரம்ப காலகட்டத்தில் நடிகரும் இயக்குநருமான விசுவுடன் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.

நாளடைவில் இவரும் விசுவை போலவே குடும்ப சம்பவங்களை மையமாக கொண்டு கதைகளை உருவாக்கினார். தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு விசு நடிப்பில் வெளியான 'வீடு மனைவி மக்கள்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த படத்தை தொடர்ந்து படங்களை இயக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து, 'எங்க ஊரு காவல்காரன்', 'தாயா தாரமா', 'பட்ஜெட் பத்மநாபன்', 'சீனா தானா' உள்ளிட்ட பல படங்ளை இயக்கியுள்ளார். கடைசியாக விவேக் நடிப்பில் வெளியான 'மகனே என் மருமகனே' என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குநராகும் முன்பே இவர், திரையில் தோன்றினார். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த இவர், இவரது இயக்கத்தில் வெளியான படங்களிலும் சின்ன சின்ன ரோலில் நடித்தார். பிரபுவை வைத்து மட்டுமே பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் ஆகிய படங்களை இயக்கினார். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த படங்கள் இவரும் ஒரு நல்ல பெயரை கொடுத்தது.

தொடர்ந்து படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மேலும் பிரபலமானார். இயக்குநராக இவர் பெரிய அளவில் அறியாவிட்டாலும், நடிகராக மக்கள் மனதில் பெரிய அளவில் இடம்பிடித்தார். குறிப்பாக சீனா தானா, வில்லு, குசேலன், சந்திரமுகி, வேலாயுதம், பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், இவர் வரும் சீன் முக்கியமானவையாகவே இருக்கும்.

தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான 'பன்னி குட்டி' படத்திலும் நடித்துள்ளார். இப்படி படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று தனது 68-வது வயதில் காலமானார். அவரது உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத்தும், நேற்று பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமும் மரணமடைந்த நிலையில், இன்று கஜேந்திரன் உயிரிழந்துள்ளது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், டிபி கஜேந்திரனின் கல்லூரி நண்பருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதற்கு இவர் கவிதை நடையில் நன்றியும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Fashion Show-வுக்கு தயாராக இருக்கும் சன்னி லியோன்.. திடீரென்று வெடித்த வெடிகுண்டு.. ரசிகர்கள் அதிர்ச்சி !