Cinema
படப்பிடிப்பில் காணாமல் போன சின்னத்திரை நடிகரின் செல்போன்.. 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலிஸ்!
சின்னத்திரையில் நடிகராக இருப்பவர் அழகப்பன். இவர் 'வந்தாள் ஸ்ரீதேவி', 'ஒரு ஊருல ராஜகுமாரி', 'ஆனந்தராகம்' உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்த ராகம்' தொடரின் படப்பிடிப்பு பெரம்பூரில் உள்ள ஒரு துணிக்கடையில் நடைபெற்றது. இதில் அழகப்பன் உட்பட சகநடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அழகப்பன் தனது செல்போனை கடையில் உள்ள டேபிளில் வைத்து விட்டு ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். பின்னர் வந்த பார்த்தபோது வைத்த இடத்தில் செல்போன் காணவில்லை.
இது குறித்து துணிக்கடை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது துணிக்கடைக்கு வந்த இரண்டு பெண்கள் செல்போனை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து சி.சி.டிவி காட்சியில் இருந்த இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடிவந்தனர்.
பின்னர் போலிஸார் தங்களைத் தீவிரமாக தேடுகிறார்கள் என்பதால் அச்சமடைந்த இருவரும் செல்போனை எடுத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 'நாங்கள் தெரியாமல் திருடிவிட்டோம், மன்னித்துவிடுங்கள்' என கூறியுள்ளனர்.
இதுபற்றி நடிகர் அழகப்பனுக்கு போலிஸார் தெரிவித்துள்ளனர். பிறகு செல்போன் கிடைத்து விட்டதால் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என கூறியதை அடுத்து போலிஸார் இரண்டு பேரையும் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். பின்னர் அவரிடம் போலிஸார் அவரது செல்போனை ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து புகார் அளித்த 24 மணி நேரத்தில் செல்போனை மீட்டுக் கொடுத்த போலிஸாருக்கு நன்றி தெரிவித்து அழகப்பன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!