Cinema

உண்மையான வெற்றிவாகை சூட தயாராகும் RRR.. Oscar-ல் இடம்பிடித்த “நாட்டு நாட்டு”... குஷியான ரசிகர்கள் !

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலி 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கிய படம் தான் RRR. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படத்தில் என்.டி.ஆர், ராம்சரண், அலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படம், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் மாஸ் ஹிட் கொடுத்தது.

கடந்த ஆண்டு வெளியான சிறந்த இந்திய படங்களில் இந்த படமும் சிறந்த படமாக விளங்கியுள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு, தொல்குடிகளின் போராளி கொமரம்பீம் போன்றோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் பல நாடுகளிலும் மொழிபெயர்த்துத் திரையிடப்பட்டது.

சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 1,200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. விஜயேந்திர பிரசாத் எழுதிய இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் இப்படம் இந்தாண்டின் சிறந்த படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு விருதுகளை குவித்து வரும் இந்த படம், திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘ஆஸ்கர்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் RRR திரைப்படம் போட்டியிட்டது. ஹாலிவுட் சீசனின் தொடக்க விழா எனக் கருதப்படும் அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த பிறமொழிப் படம் மற்றும் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் RRR பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற 80-ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் RRR படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றது. கீரவாணி இசையில் உருவான இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் இறுதிபட்டியலில் ‘நாட்டு நாட்டு’ நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் சிறந்த ஒரிஜினல் சாங் பிரிவில் நாமினேஷன் ஆன மொத்தம் 5 படத்தின் பாடல்களில் இந்த பாடல் 4-வதாக இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தமிழில் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பட்ட நிலையில், அது நாமினேஷனில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் முதல் தென்னிந்திய படமாக தற்போது RRR இடம்பெற்றுள்ளது அனைவர் மத்தியிலும் மிகுந்த ஆரவாரத்தையும் பூரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: #FactCheck : “பட்டாக்கத்தியுடன் நடிகர் விஜய்..” - தொடர்ந்து அவதூறு பரப்பும் 'தினமலர்'.. நடந்தது என்ன ?