Cinema

“நா சொன்னா ஓட்டே போடமாட்டிக்காங்க.. இத மட்டும் செய்வாங்களா?” - நடிகர் சரத்குமார் ஆதங்கம்!

தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். 90-களில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக நடித்த இவர், தற்போதும் தனது நடிப்பு திறமையால் இந்திய சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். கதாநாயகனாக, வில்லனாக, அப்பவாக, முக்கிய கதாபாத்திரம் உட்பட பல ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் பிரபலமானார். இவர் படங்களில் மட்டுமல்லாமல், சீரிஸ், விளம்பரம் உள்ளிட்டவைகளிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் முன்னதாக ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது அது மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை விளையாடி தற்கொலை செய்துகொண்டவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இது தொடர்பான தற்கொலைகள் அதிகரித்த வண்ணமாக காணபடுகிறது.

இந்த விளையாட்டில் குறிப்பிட்ட அளவு பணம் போட்டால், அதை விட அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதால், மக்கள் பலரும் இதில் தங்கள் பணத்தை லட்சக்கணக்கில் போட்டு ஏமாந்து விடுகின்றனர். அதோடு கடன் வாங்கியும் இந்த ரம்மி விளையாட்டை சிலர் விளையாடுகின்றனர். இதனால் மனம் நொந்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமையில் தள்ளப்படுகின்றனர்.

இதனால் இந்த ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரோ, வழக்கம்போல் அதனை கிடப்பில் போட்டுள்ளார். மேலும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் இது குறித்து பேச முற்படும்போது, சபாநாயகர் பேசவும் விடவில்லை. இப்படி இதற்கு தடை கோரி, தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கெல்லாம் ஒன்றிய அரசு எதிர்வினையாற்றுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இதே ஆன்லைன் ஜங்கில் ரம்மி விளையாட்டு தொடர்பான விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழும்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ரம்மி விளையாட அறிவு வேண்டும் எனவும், அது ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு எனவும் பேட்டி அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆன்லைன் ரம்மி மட்டுமின்றி இணையதளத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகள் உள்ளன. சரத்குமார் என்பவர் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததால் அதுபற்றிய கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டு வருகிறது. இதனால் நான் கவலைப்படபோவது இல்லை. இன்னமும் ஆபாச வெப்சைட்டுகள் நிறைய உள்ளன. துபாயில் 3 முறை ஆபாச இணையதளம் சென்றால் என்றால் ஐபி முகவரியை கண்டுபிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் இந்தியாவில் தற்போது வரை நடவடிக்கை இல்லை. ஆபாச வெப்சைட்டுகளை நாம் தடை செய்துள்ளோமா?

இந்த ரம்மி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது. இதை கூறும் நீங்கள், கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இது போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரத்தில் தோனி, ஷாருக்கான் வருகின்றனர். குடிப்பழக்கம் குடியை கெடுக்கிறது. புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கானது என்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் போல் ரம்மியை பார்த்து விளையாடுங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆன்லைன் ரம்மியை தடுக்க அரசு தான் சட்டம் போட வேண்டும். இதை செய்தால் தனிநபரான சரத்குமாரை நடிக்க வேண்டாம் என சொல்ல தேவையில்லை. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்திருந்தால் இந்த விளம்பரத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன். சொல்லப்போனால் ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு. இதை விளையாட அறிவு வேண்டும்.

தற்போதைய சூழலில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாக உள்ளது. இவ்வளவு ஏன் உலககோப்பை போட்டியே சூதாட்டமாக உள்ளது என்கிறார்கள். அதை வைத்தும் சூத்தாட்டம் ஆடுகிறார்கள். பொருளாதார அடிப்படையில் அனைவரும் முன்னேற வேண்டும் என்று பலரும் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வருகின்றனர்.

ஓட்டு போடுங்க என்று சொன்னால் மக்கள் போட மாட்டிக்கிறார்கள்.. ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று சொன்னால் கேட்கிறார்களா? இதெல்லாம் கேட்காதவர்கள், ரம்மி விளையாட சொன்னால் மட்டும் விளையாடி விடுவார்களா ?" என்று புலம்பலாக கூறினார்.

Also Read: “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் அரசியலமைப்பு கூறுகளுக்கு எதிராக இல்லை” : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!