Cinema

அன்பே சிவம், பகவதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் முரளிதரன் காலமானார்.. திரையுலகம் அதிர்ச்சி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரது படங்களையும் தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரரான இவர், ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார்.

கமலின் அன்பே சிவம், விஜயின் பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், மிஸ்டர்.மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, அரண்மனை காவலன், உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் இறுதியாக கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ( 30-ம் தேதி) முரளிதரன், அவரது மனைவி ருத்ரா மற்றும் கும்பகோணத்தைச்சேர்ந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி ஆகியோர் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டனர். அப்போது நேற்று பல கோயில்களுக்கு சென்று விட்டு, இன்று காலை நாச்சியார் கோயிலுக்கு சென்றனர். அங்கே திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கே இவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. இவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி கூறுகையில், ”முரளிதரன் கோயில்களுக்கு செல்வதற்காக அடிக்கடி கும்பகோணம் வருவதுண்டு. இன்று நாச்சியார்கோயிலில் உள்ள அவரது குலதெய்வ கோயிலான நாச்சியார்கோயில் தரிசனத்திற்கு சென்றபோது படியில் உட்கார்ந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு கோகுல், ஸ்ரீவத்சன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் இயக்குநர் சுந்தர்சியிடம், கோகுல் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். இவரை திரைப்பட தயாரிப்பாளராக்கி அடுத்த படம் எடுக்க வேண்டுமென இவர், திட்டமிட்டிருந்தார். மற்றொரு மகன் ஸ்ரீவத்சன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு எம்.எஸ் படிக்கிறார்” என்றார்.

Also Read: “Tum hi ho” பாடகரின் Concert ஷோ.. ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.16 லட்சமா..? - ரசிகர்கள் புலம்பல் !