Cinema
"நடிப்பில் இருந்து ஓய்வு.." - காரணத்தோடு ஆமீர் கான் வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி !
நடிப்பில் இருந்து தான் சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளதால் பாலிவுட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆமீர் கான். 1973-ம் ஆண்டு நடிக்க தொடங்கிய இவர், தற்போது வரை இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு என்று பாலிவுட்டில் தனி ரசிகர்களே உள்ளனர். இவர் நடித்த படங்கள் பல தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'தங்கல்' படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும் அண்மையில் திரையரங்கில் பான் இந்தியா படமாக வெளியான 'லால் சிங் சத்தா' எதிர்பார்த்த அளவில் ஆமீருக்கு கைக்கொடுக்கவில்லை.
அந்த சமயத்தில் ரசிகர்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படம் பெரிதாக பேசப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர் அடுத்து நடிக்க வேண்டிய படமான 'சாம்பியன்ஸ்' படத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது தான் சாம்பியன்ஸ் படம் மட்டுமின்றி, நடிப்பில் இருந்தே சிறிது காலம் ஓய்வு பெறவுள்ளதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ரசிகர்களிடம் அவர் கூறுகையில், "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் சத்தா படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.
சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து அதனை தயாரிக்கவுள்ளேன். மேலும் அந்த படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன். நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.
கடந்த 35 ஆண்டுகளாக எனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனவே நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்று அவர்களுடன் நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பாலிவுட் வட்டாரத்தில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!