Cinema

‘பொன்னியின் செல்வன்’ : ஓயாத சர்ச்சைகளும் விமர்சனங்களும் - காரணம் என்ன தெரியுமா? #PS1review

எம்.ஜி.ஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை ஆசைப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ இறுதியில் படமாகி வெளியாகியும் விட்டது. மக்களின் வரவேற்பையும் பெற்று வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ முதன்முதலாக கல்கி பத்திரிகையில் எழுத்தாளர் கல்கியால் 1950ம் ஆண்டில் தொடர்கதையாக எழுதி பெரும் வரவேற்பைப் பெற்று பின்பு நாவலாக்கப்பட்ட கதை. தமிழ்ச்சூழலில் ஆகச்சிறந்த வரலாற்றுப் புனைவாக கொண்டாடப்பட்ட நாவல் அது.

எனினும் பொன்னியின் செல்வன் நாவலைச் சுற்றி பல சர்ச்சைகள் வைக்கப்படுவதுண்டு. அவற்றில் முக்கியமான சர்ச்சை, வரலாற்று திரிபு என்பதாகும். வரலாற்றின்படி, சுந்தரச் சோழன் என்கிற சோழ மன்னனுக்கு மூன்று மக்கள். ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன். பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். ஆனால் அவனை பார்ப்பனர்கள் சூது செய்து கொன்று விடுகின்றனர். விளைவாக அடுத்த இளவரசன் அருண்மொழி வர்மன் ராஜராஜ சோழனாக பட்டம் தரித்து, பார்ப்பனர்களை தண்டிக்கிறான்.

அதுவும் எப்படி?

அண்ணனையே கொன்ற பார்ப்பனர்களை அவன் கொல்லவில்லை. அவர்கள் தப்பியிருக்கலாம் என்ற கருத்தை நாம் கொள்ள முடிந்தாலும் அவர்களை தேடுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக வேறொரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இன்றைய உடையாளூர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

அதாவது ‘ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குக் காரணமான பார்ப்பனர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டு இன்னொருவருக்கு விற்கப்படுகிறது’ என்பதே கல்வெட்டின் உள்ளடக்கம். பார்ப்பனர்கள் முன் வைக்கும் மநுநீதியின்படி பார்ப்பனர் கொலை செய்தால், அவரை ஊரை விட்டு விரட்டி விட்டுவிட வேண்டும். அவ்வளவுதான் தண்டனை. எனவே ராஜராஜசோழனும் அண்ணனைக் கொன்ற பார்ப்பனர்களை நாட்டை விட்டு விரட்டி விட்டு நிலத்தை மட்டும் பறிமுதல் செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

வரலாறு இப்படியிருக்கும் சூழலில், கல்கி வார இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி, நந்தினி என்கிற பெண்ணின் பதவி ஆசை மற்றும் பழியுணர்ச்சி ஆகியவற்றால் செய்த சதிகளால்தான் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதாக கதை புனைந்திருப்பார் கல்கி.

ஆதித்த கரிகாலனை கொன்றது பார்ப்பனர்கள் என்கிற வரலாற்றை மறக்கடித்து திரிக்கப்படவே பொன்னியின் செல்வன் எழுதப்பட்டதாகவும் ஒரு கருத்து தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை சார்ந்து தமிழ்ச்சூழலில் இத்தகைய விமர்சனம் முன் வைக்கப்பட்டாலும் அதில் கல்கி உருவாக்கிய கதாபாத்திரங்களும் அவை செய்யும் அரசியல் சதிகளும் தொடர் திருப்பங்களும் பரபரப்பும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பெருவெற்றி அடைய வைத்திருந்தது.

வரலாற்றுப் புனைவு என்பதால் ‘பொன்னியின் செல்வன்’ சோழ அரசர்களின் பெருமையை முன்வைக்கும் நாவலாகவும் இன்று வரை அவதானிக்கப்படுகிறது. பலர் அந்த நாவலை வரலாறாகவே தவறாகக் கருதிக் கொண்டிருப்பதும் இயல்பானச் சூழலாகவே இருக்கிறது.

இத்தகைய ஒரு முக்கியமான நாவலைத்தான் தற்போது இயக்குநர் மணிரத்னம் படமாக எடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படமாகும்போது வேறு விதமான சர்ச்சைகளும் உருவாயின.

மணிரத்னம் ஒரு பார்ப்பனர் என்பதால் ‘பொன்னியின் செல்வன்’ எழுதப்பட்ட காரணமான வரலாற்றுத் திரிபை ஆழமாக திரைவடிவத்திலும் நிறுவ விரும்புகிறார் என ஒரு விமர்சனம். இதில் வசனம் எழுதுவதற்கு ஜெயமோகன் வாய்ப்பளிக்கப்பட்டிருந்ததால் இதற்குள் ‘இந்துத்துவப் பிரசாரம்’ இருக்குமென ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இவை எதுவுமின்றி இன்னொரு சுவாரஸ்ய விமர்சனமும் இருந்தது.

ஒரு வரலாற்றுப் புனைவாக (!) காண்பித்துக் கொண்ட பாகுபலி இந்தியா முழுக்க வெற்றி அடைந்த சூழலில், வரலாற்றுப் புனைவாக எடுக்கப்படும் இன்னொரு படம் அந்த வெற்றியை எட்டுமா என ஒரு தரப்பும், ‘பாகுபலி’ போன்ற அபத்த சினிமாத்தனத்தை கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நாசமாக்கி விடுவார்களா என்கிற அச்சத்தை இன்னொரு தரப்பும் வெளிப்படுத்தியிருந்தது.

மேலும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்தவர்கள், புத்தகத்தைப் போல படத்தை அற்புதமாக எடுத்திவிட முடியுமா என்ற தயக்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர். எல்லாவற்றையும் தாண்டி செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வந்துவிட்டது.

எப்படி இருக்கிறது படம்?

பாகுபலியின் அபத்தமான ஆர்ப்பரிப்பு இல்லை. அளவை மிஞ்சிய பெருமிதம் இல்லை. நாவலில் இருக்கும் சாரத்தை மட்டும் எடுத்து குலையாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சூழலில் ஒரு வரலாற்றுப் புனைவு எடுக்கப்படும்போது அது எத்தகைய முதிர்ச்சியுடன் எடுக்கப்படும் என்பதை படம் காண்பித்திருக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் வரலாற்றுப் புனைவுகள் கொண்ட சினிமாத்தனங்கள் அற்று, சோழ ஆட்சியைக் கவிழ்க்க முயலும் சதி மற்றும் அரசியலை மட்டும் எடுத்து நேர்த்தியான திரைக்கதையாக்கி படம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால் ஒன்று நிச்சயம்!

ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனர்களை காப்பாற்றும் கல்கியின் முயற்சி, மணிரத்னத்தின் நோக்கம், நாவலின் முழுமை திரையில் கிடைக்காதது. சோழ வரலாற்றுக் கொண்டாட்டம் படத்தில் இல்லாதது எனப் பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு பின்னும் கூடத் தொடரும்.

அவற்றுக்கு மத்தியில் படம் பெருவெற்றியையும் பெறும்; நாவலைப் போல்.

Also Read: பொன்னியின் செல்வன் : “எனக்கு பொறாமையாக இருக்கிறது” - இணையத்தில் வைரலாகும் நடிகை மீனாவின் பதிவு !