Cinema

சைக்கோ த்ரில்லர்.. ‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவன் Touch Missing!

ஒரு அப்பா, அம்மா. அவர்களுக்கு இரு மகன்கள். பிரபு மற்றும் கதிர். பிரபு அப்பாவி மற்றும் நல்லவன். கதிர், சுட்டி மற்றும் முரடன். அப்பா ஒருமுறை அவனை தண்டிக்க வீட்டுக்கு வெளியே கட்டிப் போடுகிறார். காணாமல் போய் விடுகிறான். காட்டுக்குள் தனியே வாழும் ஒரு வேட்டைக்காரனிடம் சிக்கியிருக்கிறான். அவனுடைய மூர்க்கம் கதிரை பற்றுகிறது. அந்த வேட்டைக்காரனைக் கொன்று கதிர் தப்பி விடுகிறான். அதிலிருந்து அவன் எந்தவித தார்மிகம் அல்லது அறம் இல்லாத மனிதனாக வளர்கிறான். பிரபுவை கொடுமைப்படுத்துகிறான். கதிரைக் கண்டாலே பிரபு நடுங்குகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் கதிரை சமாளிக்க முடியாமல் அவனைக் கொண்டு சென்று தொலைத்து விடுகிறார்கள்.

வருடங்கள் ஓடுகின்றன.

பிரபு வளர்ந்து ஒரு நல்ல நிலையில் இருக்கிறான். மனைவி, மகள் என சந்தோஷமான குடும்பம். மகள் மீது மிகவும் பாசத்துடன் இருக்கிறான் பிரபு. ஒருநாளிலிருந்து மகளின் நடவடிக்கைகள் மாறுகின்றன. அமானுஷ்யத்தன்மையுடன் அவள் நடந்து கொள்கிறாள். பிரபு கவலைப்படுகிறான். மகளின் நிலை கண்டு உடைந்து போகிறான். மகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை கண்டுபிடிக்கும் அவனுடைய முயற்சி வெகுகாலத்துக்கு முன் மறந்து போயிருந்த கதிரை மீண்டும் வாழ்க்கைக்குள் கொண்டு வருகிறது. மகளை மீட்பதற்கு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டுமென்கிற கட்டாயம் பிரபுவுக்கு.

இத்தகையப் பின்னணியில் கதிரை பிரபு எதிர்கொண்டானா என்பதும் மகளின் பாதிப்பை சரி செய்தானா என்பதும்தான் படத்தின் மிச்சக்கதை.

கிட்டத்தட்ட ‘குடியிருந்த கோயில்’ காலத்து டெம்ப்ளேட் ‘நல்லவன், கெட்டவன்’, ‘தெய்வம், மிருகம்’, ‘நன்மை, தீமை’ கதை. புதிதாக ஒன்றுமே இல்லை. எல்லாமுமே ஏற்கனவே பார்த்துப் பழகிய காட்சிகள், கதாபாத்திரங்கள். இத்தகையக் கதைகள் பல வந்திருக்கின்றன. அவற்றில் குறைந்தபட்சம் புதிதாக செய்திருக்கிறோம் என்கிற பாணியிலான கதை சொல்லலேனும் இருக்கும். கதாசிரியர் அந்தளவுக்கேனும் முயற்சி எடுத்திருப்பார்.

ஆளவந்தான் படம் கூட இதே டெம்ப்ளேட் கதைதான் என்றாலும் அதைப் புதிதாக காண்பிப்பதற்கான முயற்சியை பலவிதங்களில் கமல்ஹாசன் என்கிற எழுத்தாளர் எடுத்திருப்பார். ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ என்கிற ஒரு கோணத்தை, வில்லன் பாத்திரத்துக்குக் கொடுத்திருப்பார். வளர்ப்பில் ஏற்பட்ட பாதிப்பு, சிதைந்த குடும்பம் ஆகியவை கொடுத்த பாதிப்பு மனதில் வில்லனை தேங்க வைத்துவிட்டது என ஒரு மனநிலை பாதிப்பை அறிவியல்பூர்வமாக முன்வைத்திருப்பார். அதே போல் வில்லனின் சிந்தனைக்கு பின் இருக்கும் பரிணாமம் பற்றிய கேள்வியும் ஞாபகம்தான் அவனுக்கு நோய் என்பதையும் தெளிவாக்கி இருப்பார். மனதளவில் வில்லன் வளராமல் தேங்கிய ஒரு குழந்தை என்பதற்கான நடிப்பும், கார்ட்டூன் சண்டைக் காட்சியும், அம்மாவாக கற்பனை செய்து தேம்பும் காட்சியும் வைக்கப்பட்டிருக்கும். உளவியலாக, சமூகவியலாக ‘நன்மை, தீமை’ சிக்கலை அணுகியிருப்பார் கமல்ஹாசன்.

‘நானே வருவேன்’ படத்தில் நன்மைக்கும் தீமைக்குமான காரணங்கள் இல்லை. இரண்டுமான முரணியக்கம் இல்லை. இளம்வயதில் தொலைக்கப்பட்டப் பிறகு கதிர் பாத்திரம் நாசமாக போகாமல் ஒரு நல்ல குடும்பஸ்தனாக வாழ முடியும் சாத்தியம் எப்படி நேர்ந்தது என விளக்கப்படவில்லை.

வழக்கமான செல்வராகவனின் படங்களில் வசனங்கள் கூர்மை கொண்டிருக்கும். காட்சிகள் பாத்திரங்களின் முழுமையையும் கொண்டு வரும் அளவுக்கு விரிவாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கிலம் எல்லாம் மேட்டுக்குடிகளின் போலித்தனத்தை காட்டதான் செல்வராகவன் பயன்படுத்துவார். இப்படத்தில் நிறைய ஆங்கில வசனங்களை நாயகன் பேசுகிறார்.

‘நானே வருவேன்’ படத்தில் செல்வராகவன் எங்குமே தெரியவில்லை. காட்டுக்குள் தோன்றி கொல்லப்படும் காட்சியில் நடிப்பது மட்டும்தான் செல்வராகவனின் அநேகமாக உண்மையான முழுமையாகப் பங்காக படத்தில் இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. கதாசிரியராக தனுஷ் முழுத் தோல்வியை அடைந்திருக்கிறார்.

’நானே வருவேன்’, வரவே இல்லை!

Also Read: ‘பொன்னியின் செல்வன்’ : ஓயாத சர்ச்சைகளும் விமர்சனங்களும் - காரணம் என்ன தெரியுமா?