Cinema

'சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கற உறவு'.. வசனத்திலும் நாயகன் கமல்ஹாசன்: எந்த படத்தின் வசனம் இது?

ஹேராம் படம் பல காரணங்களுக்காக சிறப்பு கொண்ட படம். ஒளிப்பதிவு, இயக்கம், வரலாறு, அரசியல், திரைக்கதை எனப் பலக் காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. அதன் வசனம்!

”ஓநாய் பிள்ளைக் கறி கேட்டா நியாயம்பேளா?”

”ஓநாயோட பார்வையில இருந்து பார்த்தா அந்த நியாயம் புரியும்?”

என்கிற வில்லத்தன வசனங்களே நுட்பம் கொண்டிருந்தாலும் ஒரு அற்புதமான காட்சி ஒன்று உண்டு. தான் வசித்த வீட்டுக்கு மீண்டும் நாயகன் சாகேத் ராம் செல்லும் காட்சி. அவரது மனைவி கொல்லப்பட்ட வீடு அது. அதற்கு பின் வலதுசாரி தீவிரவாதியாக சாகேத் ராம் மாறியிருக்கிறான். எனினும் அந்த மாற்றம் அவனுக்கு பிடிக்கவில்லை. மனைவியுடன் வாழ்ந்த அந்த கடந்த காலத்துக்கு திரும்பிச் செல்ல ஏங்குகிறான். முடியவில்லை. எனவே அந்த கடந்த காலம் வாழும் வீட்டைப் பார்க்கச் செல்கிறான். அங்கு வேறு ஒருவர் இருக்கிறார். அவருடனான சாகேத் ராமின் உரையாடல் இப்படி செல்கிறது:

வீட்டுக்காரர்: பேரென்ன சொன்னது?

சாகேத் ராம்: சாகேத் ராம்!

வீட்டுக்காரர்: கடைசியா எப்ப பாத்தது அவரெ?

சாகெத் ராம் (புரியாமல்): யாரை?

வீட்டுக்காரர்: சாகேத் ராமை!

சாகேத் ராம்: சாகேத் ராம்..... ஹ்ம்(சின்னதாய் விரக்தி சிரிப்பு சிரித்துவிட்டு) ஒரு வருஷம் இருக்கும். எக்ஸாக்ட்லி ஒன் இயர்.

வீட்டுக்காரர்: தப்பா நெனைக்கண்டா... ஒரு வருஷம் முன்னாலே.. இங்க riotல.. நெறைய பேரு செத்ததாக சொல்றாங்க. உங்க ப்ரெண்டு சாகேத் ராமும்... அந்த கூட்டத்துலே.. போயிருக்கலாம். ஐயம் சாரி.

சாகேத் ராம்: நோ.. இட்ஸ் ஆல்ரைட்.. அப்போ.. அவன தேடி பிரயோஜனம் இல்லல்லியா?

வீட்டுக்காரர்: தேடறதுல்ல தப்பில்லே. உங்களுக்கும்.. சாகேத் ராமுக்கும் என்ன உறவு?

சாகேத் ராம்: சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கற உறவு. ரொம்ப நல்ல (குரல் உடைவதை சரி செய்துகொண்டு) ப்ரெண்ட்... காணாமலே போயிட்டான்.

தன் தொலைந்து போன வாழ்க்கையை திரும்ப பெற முடியாத அளவுக்கு சூழல் மாறிப்போன பிறகு, பழைய சந்தோஷத்தை மீட்டுவிட முடியுமா என்கிற நப்பாசையில் காதலியுடன் வாழ்ந்த வீட்டை நினைவுகளோடு அசை போடும் கமலுக்கும் அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளருக்கும் நடக்கும் உரையாடல் இது.

பழைய வாழ்க்கையின் சந்தோஷத்திலிருந்து நெடுந்தூரம் தள்ளி வந்தும் அந்த சந்தோஷத்துக்கு, அந்த பழைய சாகேத் ராமுக்கு ஏங்கும் மனதோடு வீட்டுக்காரர் வழியாக பேசுவது போல் காட்சி அமைத்திருப்பார் கமல். அதுதான் அந்த 'சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான உறவு' என்ற வசனம்.

'அவனை தேடறதுல ப்ரயோஜனம் இல்லல்லியா' என வீட்டுக்காரரை கேட்கும் கேள்வி உண்மையில் கமல் தன் மனதை பார்த்து கேட்கும் கேள்வி. முடிவில் 'ரொம்ப நல்ல ப்ரெண்ட்' என சொல்லி, குரல் கம்மி, பழைய சந்தோஷம் தொலைந்தே போனது என அர்த்தப்படுத்தும் வகையில், 'காணாமலே போயிட்டான்' என முடிப்பார் கமல்.

இப்படி ஒரு broke down conscience- ன் உணர்வை கவித்துவமாக உளப்பூர்வமாக இத்தனை சிறப்பாக திரையில் வேறு எவரும் வடித்திட முடியுமா என தெரியவில்லை.

Also Read: 47 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் படம்.. Godfather!