Cinema

பத்திரிகையில் வெளியான புகைப்படம் ஒருவரது வாழ்க்கையை இப்படியும் மாற்றுமா? : The Valet படம் சொல்லும் பாடம்!

Valet என்பது ஒரு பணியின் பெயர். நட்சத்திர விடுதிகள், பெருநிறுவனங்கள் போன்ற இடங்களுக்கு வரும் பணக்காரர்கள், கார்களை அவர்களே சென்று வாகன நிறுத்தத்தில் நிறுத்த மாட்டார்கள். அந்த வேலையை அவர்களுக்கு செய்து கொடுப்பவரின் பெயர்தான் Valet. நட்சத்திர விடுதிக்கு வந்து இறங்கும் நபர், காரின் சாவியை Velet-யிடம் கொடுப்பார். அவர் காரை கொண்டு போய் வாகன நிறுத்தத்தில் நிறுத்துவார்.

இப்படத்தின் நாயகன் அண்டோனியோ ஃப்ளோரெஸ் Valet வேலையைச் செய்பவன். அவனது மனைவி இசபெல் அவனைப் பிரிந்து சென்றுவிட்டாள். ஒரு ரியல் எஸ்டேட்காரனை மணம் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறாள். ஒரு மகன். இருவரும் மாதத்தின் 15 நாட்களுக்கு தங்கள் வீட்டில் மகனை வளர்க்கிறார்கள். ஏழ்மை நிறைந்த வீடு. நாயகனுக்கு ஒரு அம்மா மட்டும் இருக்கிறார். நாயகன் அமெரிக்கன் இல்லை. மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்தவன்.

ஒருநாள் நடிகை ஒலிவியா வாடகைக் காரில் ஏற நின்று கொண்டிருக்கிறாள். அவள் கள்ள உறவு கொண்டிருக்கும் பணக்காரனான வின்செண்டுக்கும் ஒரு வாக்குவாதம். காரில் அவள் ஏறுவதற்கு முன் அவளிடம் பேச வின்செண்ட் வருகிறான். அவள் பேச மறுக்கிறாள். வாக்குவாதம் முற்றுகிறது. அச்சமயத்தில் சைக்கிளில் வரும் நாயகன் காரின் மீது இடித்து கீழே விழுகிறான். நடிகையின் கள்ள உறவை படம்பிடிக்க ஒரு பத்திரிகையாளன் முயலுகிறான். அவன் எடுக்கும் படத்தில் ஒலிவியாவும் வின்செண்டும் நிற்க, இருவரின் அருகேயும் நாயகனும் நின்று கொண்டிருக்கிறான். அடுத்த நாள் செய்திகளை அப்புகைப்படம் நிறைக்கிறது.

விஷயம் மனைவிக்கு தெரிந்துவிடக் கூடாது என நினைக்கும் வின்செண்ட் ஒலிவியாவிடமும் நாயகனிடமும் பேசுகிறான். புகைப்படத்தில் இருக்கும் அவர்கள் இருவருக்கும்தான் காதலுறவு இருப்பதாக செய்திகளை உருவாக்குவதென முடிவு செய்யப்படுகிறது. நாயகனுக்கு ஒரு தொகை தந்துவிடுவதாக வின்செண்ட் உறுதியளிக்கிறான். அடுத்த நாள் நாயகனுடன் ஒலிவியா, திரைப்படத்துக்கும் ரெஸ்டாரண்டுக்கும் செல்லத் தொடங்குகிறாள். ஒரு சினிமா நாயகி சாதாரண ஒரு சிப்பந்தியை காதலிக்கிறாள் என செய்திகள் மாறத் துவங்குகின்றன.

நாயகனுக்கு என்ன நேர்கிறது, வின்செண்டின் மண உறவு என்னவாகிறது, நாயகனின் மனைவி என்னவாகிறாள், நடிகை ஒலிவியா என்னவாகிறாள் என சொல்வதே படத்தின் மிச்சத் திரைக்கதை.

ஒரு பிரபலத்தை காதலிக்கும் சாதாரணன் என்கிற கதையம்சம் கொண்ட பல படங்கள் உலகளவில் வெளியாகி இருக்கின்றன. என்றாலும் இப்படம் கொண்டிருக்கும் எளிமையும் புலம்பெயர்ந்தோரின் யதார்த்தமான குடும்ப வாழ்க்கைச் சூழலும் நம்மை படத்தில் இருத்தி வைக்கிறது. பணக்காரர்கள் கொண்டிருக்கும் போலியான, வெறுமை நிறைந்த வாழ்க்கையும் ஏழ்மை இருந்தாலும் நிறைவை கொண்டிருக்கும் எளிய மனிதரின் வாழ்க்கைகளும் அற்புதமாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

படத்தின் பெரும் பலம் நாயகன் பாத்திரத்தில் நடித்திருக்கும் யூஜினியோ டெர்பெசிதான். 61 வயதானவராக இருந்தாலும் அப்பாவித்தனமான ஓர் எளியனின் வாழ்க்கையை ரசிக்கும்படி தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். கதையினூடாக ஒரு போராட்ட அரசியல் கதையும் பின்னப்பட்டிருக்கிறது. இத்தகைய கதையம்சங்கள் கொண்டப் படங்கள் கொண்டிருக்கக் கூடிய முடிவாக இல்லாமல், யதார்த்தமாக படம் முடிந்திருப்பது பெரும் ஆசுவாசம்.

Also Read: Imagined Reality என்னும் கற்பனை யதார்த்தம்.. மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!