Cinema

சித்ரா மீது அவதூறு பரப்புவது ஏன்? இதுநாள் வரை கோமாவில் இருந்தாரா? ஹேமந்த்துக்கு சித்ராவின் தாய் கேள்வி!

சித்ராவின் மரண வழக்கு நேர்மையாக நடைபெற முதல்வர் தலையிட வேண்டுமென தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் பெற்றோர் பேட்டியளித்துள்ளார்கள். 

சென்னை திருவான்மியூரில் உள்ள சின்னத்திரை நடிகை சித்ராவின் வீட்டில் அவரது பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது சித்ராவின் தாயார் வசந்தா கூறுகையில், ”சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில ஹேமந்த் தற்போது சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருவது ஏன்? இவ்வளவு நாட்களாக கோமாவில் இருந்தாரா அல்லது குடித்துவிட்டு போதையில் இருந்தாரா? இப்போது ஏன் பேச வேண்டும்?. சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பது அவனுக்குதான் தெரியும்.

சம்பவத்தன்று வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு, சித்ராவை ஹோட்டலில் ஏன் தங்க வைத்தார்கள். சித்ராவின் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை. சில யூட்யூப் சேனல்களில் சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.

ஹேமந்த்திற்குதான் குடிப்பழக்கம், தேவையற்ற நண்பர்களின் சவகாசம் உள்ளது. ஹேமந்த்தின் நண்பர்களை எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம் என கூறினேன். ஹேமந்த்துடன் சேர்ந்ததால்தான் சித்ராவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

எங்களுக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. வீட்டின் அருகே கடைக்கு சென்று வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் என்னை மிரட்டி விட்டு சென்றார். அவரை பற்றி போலிஸில் புகார் அளித்துள்ளோம்.

சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறுகின்றனர். பட்டு புடவையில் எப்படி தூக்கிட்டுக் கொள்ளமுடியும். அவர் தூக்கில் தொங்குவது போன்ற புகைப்படம் உள்ளதா?

சித்ராவின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளது. சித்ராவின் தந்தை காமராஜ் காவல் துறையில் எஸ்.ஐ ஆக பணியாற்றியவர். எத்தனையோ பிரேத பரிசோதனைகளை பார்த்துள்ளார். அவரையே ஏமாற்றுகிறார்கள்.

எங்கள் வீட்டில் இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் எங்களை கட்டாயப்படுத்தி சித்ராவின் உடலை எரிக்க வைத்தனர்.

சித்ராவிற்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் உள்ளது என்று கூறுகின்றனர். அவரின் உடமைகளை நான் பார்த்திருக்கிறேன். அதில் சிகரெட் இருந்ததை நான் பார்த்ததில்லை. தேவதை போல் வைத்துக்கொள்வேன் என கூறி, என் பொண்ணை கடைசியில் தேவைதையாகவே ஆக்கியுள்ளான் ஹேமந்த். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த வழக்கில் தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும். உண்மையை கண்டறிய ஹேமந்திற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்திட வேண்டும்.” இவ்வாறு பேசியுள்ளார்.

இதுகுறித்து சித்ராவின் தந்தை காமராஜ் கூறுகையில், “பிரேதத்தை பார்க்கும் போதே கொலையா, இயற்கை மரணமா என்பதை ஊகிக்க முடியும். சித்ரா-வின் பிரேத பரிசோதனையின் போது சரியான மருத்துவர் இல்லாத காரணத்தினால், சித்ரா மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சித்ராவின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயங்கள் உள்ளன. ஹேமந்த்தின் பின்புலத்தில் யாரோ அவரை இயக்குகின்றனர். அவர் யாரென்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

Also Read: தாலி கட்டும் நேரத்தில் மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. விஷம் அருந்திய மணமகள்: காரணம் என்ன?