Cinema

’இயக்குநர் மணிகண்டனை கொண்டாட வேண்டும்’ : 'கடைசி விவசாயி' படம் பார்த்து கண்ணீர் விட்ட மிஷ்கின்!

மணிகண்டன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'காக்கா முட்டை' படம் அனைத்து தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்குச் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள 'கடைசி விவசாயி' படமும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்தப் படத்தைத் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விவசாயத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன, வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எல்லாம் தனித்துவமாக அமைந்துள்ளது இந்தப் படம். விவசாயத்தை விட்டுவிடக்கூடாது என போராடும் ஒரு விவசாயியின் வாழ்வியலே இந்தப் படத்தின் மையக் கதை.

இந்தப் படம் பிப்.11ஆம் தேதி திரைக்கு வந்து பாராட்டு பெற்றுவரும் நிலையில், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படம் இது என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,"படத்தின் இடைவேளை காட்சியின் போது கதறி அழுதிருக்க வேண்டும். ஆனால் கண்ணீர்த் துளியோடு அமர்ந்திருந்தேன். எனது வாழ்நாளைக் காட்டிய படமாக இதைப் பார்க்கிறேன்.

கனடாவில் இருக்கும் என் மகளை இந்தப் படம் பார்க்கச் சொல்வேன். பின்னர் அவளிடம் கனடாவில் இருப்பது பற்றி மீண்டும் ஒருமுறை ஆலோசிக்க வேண்டும் எனக் கூறுவேன். குழந்தையைக் கூட்டிச் சென்று இந்தப் படத்தை பாருங்கள்.

நான் எடுத்த பத்து படங்களைக் காட்டிலும் மிக சிறந்தப் படம் கடைசி விவசாயி. இந்தப் படம்தான் வாழ்க்கையின் முக்கியமான படம். இந்தப் படத்தைக் கொடுத்த இயக்குநர் மணிகண்டனை நாம் கொண்டாட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஜாலி ஜாலி அடிபோலி” - வெளியானது அரபிக் குத்து; Halamithi Habibo மோடில் விஜய் ரசிகர்கள்!