Cinema

ஒரு முறை மட்டுமே சாப்பாடு.. மனிதர்களுக்குள் என்ன நடக்கும்? - ‘Platform' படம் நமக்குச் சொல்வது என்ன?

பாரசைட் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆஸ்கர் விருது பெற்ற கொரிய படம். அதைவிட முக்கியமான சேதி ஒன்று இருக்கிறது. அப்படம் வர்க்கப் பிரச்சினையைப் பேசும் படம்.

வர்க்கப் பிரச்சினை என்றால் பணக்காரன்-ஏழை என்ற பிரிவினை. அப்பிரிவினைக்கு அடிப்படை முதலாளி-தொழிலாளர் பிரிவினை. பொதுவாக முதலாளி என்பவன் பணக்காரனாக இருப்பான். பெரும் சொத்துகளுக்கு அதிபதியாக இருப்பான். தொழிலாளி முதலாளியிடம் வேலை பார்ப்பான். சொத்து இருக்காது. வாழ்க்கையும் இருக்காது. ஓடி ஓடித் தீரும் வாழ்க்கைதான் அவனது இருப்பாக இருக்கும்.

தொழிலாளியின் இருப்பிலிருந்து வெளியேறி முதலாளிக்கு எதிராக அவன் கிளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவனை முடக்க பல வழிகளைச் செய்து வைத்திருப்பான். கடவுள், குடும்பம், மேலாளர், பணி நிரந்தரமின்மை, சம்பாத்தியம் எனப் பல வழிகள். அத்தகைய வழிகளை பெரும்பாலான படங்கள் நேரடியாக பேசி விமர்சிப்பதில்லை. பேசினாலும் கிளர்ச்சியை தீர்வாக வைத்ததில்லை. அமெரிக்கத்தன்மையையே அடிநாதமாக படங்கள் கொண்டிருந்தன. ஆனால் சமீபமாக வரும் பல திரைப்படங்கள், 'பாரசைட்' போல வர்க்க அரசியலைப் பேசுகின்றன. அத்தகையவொரு படம்தான் Platform.

நாயகன் ஓர் அறையில் விழித்தெழுகிறான். அந்த அறைக்குள் இன்னொருவனும் இருக்கிறான். அறைக்கு நடுவே தரைதளத்திலும் மேல்தளத்திலும் ஒரு துளை. அந்த துளையின் வழியாக ஒரு மேஜை வரும். சில நிமிடங்கள் நிற்கும். அதற்குள் உணவு உண்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நேரம் முடிந்தபிறகு மேஜை கீழே உள்ள அடுத்த தளத்துக்கு செல்லும். அங்குள்ள இருவர் சாப்பிட வேண்டும். பிறகு அடுத்த தளம்.

கிட்டத்தட்ட 300 தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு அறை. ஒவ்வொரு அறையிலும் யாரோ இரண்டு பேர். ஒரே மேஜை. ஒரு தடவைதான் அம்மேஜை ஒரு நாளில் நிரப்பப்படும். முதல் தளத்தில் இருப்போர் மிச்சம் வைக்கும் உணவே அடுத்தடுத்த தளத்தில் இருப்போருக்கு. போகப்போக உணவு குறைந்து கடைசி நூறு தளங்களுக்கு உணவு இருக்காது.

குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைவரின் தளங்களும் மாற்றப்படும். நல்ல அளவில் உணவு கிடைப்போர் உணவு கிடைக்காத தளங்களுக்கும் உணவு கிடைக்காத தளங்களில் இருப்போர் உணவு கிடைக்கும் தளங்களுக்கும் அடிக்கடி மாற்றப்படுகையில் அவர்களின் மனநிலையும் சிந்தனையும் வடிவம் கொள்கிறது. அடித்துப் பிடித்து அடுத்தவனை கொன்றாவது மேலே செல்ல வேண்டும் என்கிற உள வடிவம்தான் அது.

புத்தகத்துடன் அந்த இடத்துக்கு வரும் நாயகன், மிருகங்களைப் போல் நடந்து கொள்ளும் மாற்றம் மனிதர்களில் நேர்வதைக் கண்கூடாகப் பார்க்கிறான். நாமும். அவனும் விலங்காக மாறும் தருவாயை எட்டும்போது சட்டென தவறை உணர்கிறான். மாற மறுத்து மனிதத்தை நோக்கிய மாற்றத்தை யத்தனிக்கிறான்.

மனிதத்துக்கான அந்த மாற்றம் என்னவென்பதே மிச்சக் கதை.

பேராசையும் அதிகாரமும் கட்டுப்பாடும் இயல்பான மனதை சிதைத்து எப்படி ஒடுக்குமுறையை மனித இயல்பாக மாற்ற முனைகிறது என்பதை வெகுசிறப்பாக படம் உருவகத்தின் வழி நமக்கு சொல்லியிருக்கிறது. மட்டுமின்றி, அத்தகைய மாற்றத்தை மறுத்து அதற்கு எதிராக நாம் எப்படி அடியெடுத்து வைக்க முடியும் என்பதற்கான நம்பிக்கை திசையையும் படம் காட்டுகிறது.

முக்கியமான படம். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கிறது. பார்த்து விடுங்கள்.

Also Read: நாம் பார்த்திராத கேங்ஸ்டர்... ‘கருட காமனா ரிஷப வாகனா’ கன்னட படம் சொல்லும் விஷயம் என்ன?