Cinema
Bore வாழ்க்கையை மாற்ற நினைத்தவரை கொல்ல துடிக்கும் கும்பல்.. ஆபத்தை உணர்ந்து காய் நகர்த்திய Free 'Guy' !
Free Guy என்றவொரு ஆங்கிலத் திரைப்படம். ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
Guy என்பது ஒரு பாத்திரத்தின் பெயர். அந்த கய் என்பவன் ஒரு வங்கியில் பணிபுரிகிறான். அங்கு அவனது உற்ற தோழன் படியும் பணிபுரிகிறான். வழக்கமாக காலை எழுந்து வேகமாக கிளம்பி பணிக்கு செல்லும் ஒரு வழக்கமான நாயகன்தான் கய். ஆனால் அவனது எல்லா காலைகளும் ஒன்று போலத்தான் இருக்கும்.
காலை எழுவான். காலைக் கடன்களை முடிப்பான். கிளம்புவான். போகும் வழியில் அனைவரையும் பார்த்து புன்னகைப்பான். போகும் வழியில் ஒரு கடையில் காபி அருந்துவான். பின் வங்கிக்கு சென்று பணி துவங்குவான். சற்று நேரத்தில் வங்கிக்குள் கொள்ளையர்கள் வருவார்கள். அச்சம்பவம் வரை எல்லா தினமும் ஒரே நிகழ்வுப் போக்குதான். கொள்ளையன் வந்த பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் மாறும். காரணம் என்ன தெரியுமா?
கய் இருக்கும் அந்த உலகம் ஒரு ஆன்லைன் விளையாட்டில் இருக்கும் உலகம். அந்த உலகத்தில் இருக்கும் கதாபாத்திரங்களை உலகின் பல மூலைகளிலிருந்து பலர் இயக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எனவே ஒவ்வொரு நாளும் கொள்ளையன் நுழைந்த பிறகு சம்பவங்கள் மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கயின் கதாபாத்திரத்தை யாரும் இயக்க மாட்டார்கள். அவன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் அந்த உலகில் துணை கதாபாத்திரங்கள்தாம்.
எனவே காலை எழுந்து கிளம்பி காபி குடித்து வங்கிக்கு சென்று சாவது மட்டும்தான் கய் பாத்திரத்துக்கு எல்லா நாட்களும் நடக்கும். தான் இருக்கும் உலகம் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உலகம் என்கிற உண்மையை கய் உணரும் ஒரு நாள் வருகிறது.
அனுதினம் கிளம்பும் ‘போரான’ வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே ஒருநாள் வங்கிக்கு செல்லும் வழியில் அவன் காபி வாங்கும் கடையில், வழக்கமாக வாங்கும் காபி வகையில்லாமல் வேறு வகை காபியைக் கேட்கிறான். உடனே பிற கதாபாத்திரங்கள் ஆச்சரியப்படுகின்றன. ஒரு துணை கதாபாத்திரம் எப்படி சுயமாய் மாற்றத்தை அடைந்தது என அதிர்ச்சியடைகின்றன. அவனது மாற்றம் மொத்த உலகையும் குலைத்துவிடும் என்பதால், அவனைக் கொல்வதற்கான முயற்சிகள் திடுமென நடக்கும்.
ஆபத்தை உணர்ந்து கய் சட்டென பழைய காபி வகையை கேட்பான். மறதி என்பதுபோல் பொய் சொல்கிறான். பழைய காபி வகை கேட்டதும் பிற கதாபாத்திரங்கள் இயல்புக்கு திரும்புகின்றன. கொலை முயற்சிகள் கைவிடப்படுகின்றன. அங்கிருந்து தப்பி விட்டாலும் கய்க்கு முதல் முரண் தோன்றியிருக்கும். அந்த உலகில் ஏதோ தவறாக இருப்பதை உணர்கிறான். நண்பன் படியிடம் பகிர்கிறான்.
விளையாட்டுக்கு வெளியே இந்த விளையாட்டை வடிவமைத்த நிறுவனம் இருக்கும். அதில் புதுப்புது கதாபாத்திரங்களை வடிவமைக்கும் பொறியாளர்கள் இயங்கிக் கொண்டிருப்பார்கள். முதலாளிக்கு லாபவெறியில் ஊழியர்களை கடுமையாக வேலை வாங்கிக் கொண்டிருப்பான். குறிப்பாக இரு ஊழியர்களின் ஐடியாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய விளையாட்டில் அவர்களுக்கான பெயரைக் கூட குறிப்பிடாமல் ஒடுக்கி சுரண்டி லாபமீட்டிக் கொண்டிருப்பான்.
எனவே முதலாளிக்கே தெரியாமல், ரகசியமாக அவர்கள் சில கதாபாத்திரங்களை உருவாக்கி விளையாட்டின் ஒழுங்கை கெடுக்கவென விளையாட்டுக்குள் விட்டிருப்பார்கள். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், விளையாட்டுக்குள் இருக்கும் கய் கதாபாத்திரம் இரு ஊழியர்கள் ரகசியமாக உருவாக்கிய பாத்திரமும் இல்லை.
கய் தன்னுணர்வு பெற்று பிரதான பாத்திரங்கள் அல்லாத துணை பாத்திரங்களின் வாழ்க்கைக்கான இடத்தைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறான். அவனைக் கொண்டு விளையாட்டின் ஒழுங்கை குலைத்து விளையாட்டுப் பாத்திரங்களுக்கும் அவற்றை இயக்கி உலகெங்கும் விளையாடுபவர்களுக்கும் நிறுவனம் பற்றிய உண்மையைச் சொல்ல இரு ஊழியர்களும் முயற்சி செய்கிறார்கள். யாருடைய கட்டுபாட்டுக்கும் இயங்காத கய் கதாபாத்திரம் கலகம் செய்யத் தொடங்கியதை அடுத்து, அந்த பாத்திரத்தை அழிக்க முதலாளி முனைகிறான்.
கிட்டத்தட்ட அனுதினம் ஒரே மாதிரியான அலுப்பான வாழ்க்கை வாழும் நம்முடைய கதைதான். யாருடைய விளையாட்டின் உலகிலோ வெற்று பாத்திரமாக உலவி வாழ்க்கையை வீணடிக்கும் நாம் தன்னுணர்வு பெற்று கலகம் செய்யத் தொடங்கினால் என்னவாகும் என்கிற ஆர்வத்தை இப்படம் ஏற்படுத்தி விடுகிறது.
ஆர்வம் மேலோங்க, படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!