Cinema

‘Squid Game’ வெப் சீரிஸ் காப்பி செய்து கொடுத்தவருக்கு மரண தண்டனை.. பார்த்தவர்களுக்கு ஆயுள் தண்டனை!

வடகொரியாவில் ‘Squid Game’ வெப் சீரிஸை பென் ட்ரைவில் ஏற்றி வந்து வடகொரியாவில் பரப்பியதற்காக ஒருவருக்கு மரண தண்டனையும், வெப் சீரிஸ் பார்த்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘Squid Game’ வெப் சீரிஸை சட்டவிரோதமாக பென் ட்ரைவில் வட கொரியாவுக்குள் கடத்தி வந்து அதை பென் ட்ரைவ் மூலம் விற்பனை செய்தவருக்கு தூக்கு தண்டனையும், அந்த வெப் சீரிஸை பார்த்த பள்ளி மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளையும் வட கொரிய அரசு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய இயக்குனர் ஹுவாங் டோங் ஹூக் உருவாக்கிய ஸ்குவிட் கேம், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. நெட்ஃபிளிக்ஸில் இதுவரை வெளியான தொடர்களிலேயே மிகவும் ஹிட்டான தொடராக இது உள்ளது.

இந்நிலையில், சீனா சென்று திரும்பிய வடகொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘Squid Game’ வெப் சீரிஸை பென் ட்ரைவ் மூலம் பதிவு செய்து தனது நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார். மேலும் அதை பென் ட்ரைவ்களில் பிரதியெடுத்து ரகசியமாக விற்பனை செய்தும் வந்திருக்கிறார்.

வட கொரியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இப்படி ரகசியமாக ‘Squid Game’ வெப் சீரிஸ் பார்த்தது ரகசிய ஏஜெண்டுகள் மூலம் அரசின் கவனத்துக்குச் சென்றது. இது குறித்து வடகொரிய அரசு விசாரணை நடத்தியது.

வடகொரியாவில், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீடியோக்கள், தொடர்களை வட கொரியாவுக்குள் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டுவருபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க்கப்படும்.

அதன்படி, வட கொரியாவுக்குள் தடை செய்யப்பட்ட ‘Squid Game’ வெப் சீரிஸை கொண்டு வந்த நபருக்கு மரண தண்டனையும், அந்த நபரிடம் இருந்து வெப் தொடர் அடங்கிய பென் ட்ரைவை வாங்கிய பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனையும். சம்பந்தப்பட்ட மாணவரின் பென் ட்ரைவை வாங்கி வீடியோ சீரிஸ் பார்த்த 6 மாணவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியின் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் உள்ளிட்டவர்களை பணி நீக்கம் செய்து வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உயிரைப் பணயம் வைத்து ஆடும் இரக்கமற்ற விளையாட்டு - ‘Squid Game’ வெப் சீரிஸ் சொல்வது என்ன?