Cinema

காதல் ஜோடிகளுக்குள் ரகசியங்கள் இருக்கலாமா? - ‘Perfect Strangers’ திரைப்படம் சொல்வது என்ன?

Perfect Strangers என ஒரு இத்தாலியப் படம்! மூன்று நண்பர்கள் ஜோடி விருந்து ஒன்றுக்கு திட்டமிடுகின்றனர். நான்காவதாக இருப்பவன், தான் மணம் முடிக்கப் போகிறவரை அறிமுகப்படுத்தப் போகிறான். அதைக் கொண்டாடும் விதமாகத்தான் விருந்து!

விருந்தில் மூன்று ஜோடிகளும் மற்றும் ஒரு தனியனும் கலந்து கொள்கிறார்கள். அந்த தனியன் தான், தன் ஜோடியை அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் ஜோடிக்குக் காய்ச்சல் என்பதால் தனியாக வந்திருக்கிறான். விருந்து நடக்கும்போது ஒரு வில்லங்கமான விளையாட்டு விளையாட முடிவு செய்கிறார்கள்.

ஜோடிகளுக்குள் ரகசியம் இருக்க முடியுமா எனத் தொடங்கி அதையும் பார்த்துவிடுவோமே என்றுதான் அந்த விளையாட்டு முடிவாகிறது. அதாவது, அனைவரும் கைபேசிகளை எடுத்து வைத்து விட வேண்டும். குறுஞ்செய்தி வந்தால் அனைவருக்கும் தெரியப் படிக்க வேண்டும். அழைப்பு வந்தால் லவுட் ஸ்பீக்கரில் பேச வேண்டும். இதுதான் விளையாட்டு.

காதல், காமம், குடும்பம், உறவு எல்லாம் எவ்வளவு பூடகமானவை, போலியானவை, உறுதி அற்றவை என்பதை படம் பட்டவர்த்தனமாகக் காண்பிக்கிறது.

‘அவர்கள் எல்லாம் வெளிநாட்டினர், அவர்களுக்குள் ரகசியங்கள் வைத்துக்கொள்ளக்கூடிய சமாசாரங்கள் ஏராளம் இருக்கும், நாங்கள் அப்படி இல்லை’ எனலாம். அப்படி பெரிய வித்தியாசங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. ‍‍‍‍ ‍‍

கணவனின் தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்க முயல்வது, முகமறியா அந்தரங்க முகநூல் நண்பன், பழைய காதலன், காதலென வந்தவளை புணர்ந்து கர்ப்பமாக்குவது, ஓரினச் சேர்க்கை விருப்பம் உள்ளவன் என எல்லாம் நம் சமாசாரம்தான். ‍‍‍‍‍

எத்தனை லவ் யூக்களாலும் மிஸ் யூக்களாலும் நம் உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது? காலப்போக்கில் ஏற்படும் ஒவ்வொரு பிசகும் உறவை நீர்த்து போகச் செய்தபிறகு, எஞ்சி இருக்கும் மிஸ் யூக்கள், லவ் யூக்கள் எல்லாம் மிச்ச வாழ்க்கைப்பாட்டை தீர்த்து முடிப்பதற்கான பாசாங்காக மாறிவிடுகின்றன என்பதுதானே உண்மை? ‍‍‍‍‍‍ ‍

Perfect Strangers படத்தில் ஒரு ஜோடியின் ஆண் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள மாட்டார். கைபேசியை அணைத்து வைத்துவிடுவார். படம் முடியும்போது, விளையாட்டில் கலந்து கொள்ளாமல் இருந்ததற்கான காரணத்தை மனைவியிடம் இப்படி விளக்குவார்: ‍‍‍‍‍‍

“நம் உறவுகள் உடையக்கூடியவையா என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அத்தனையும் கண்டிப்பாக உடையக்கூடியவையே. அதை சோதிப்பதை விடுத்து, உடையும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால், எதிர்பார்ப்புகள் குறைந்து, உடைவதற்கான வாய்ப்புகளாவது குறையும்’ என்பார்.

எத்தனை உண்மை!

ஆழமான காதலும் நம்பிக்கையும் கொண்டு இருப்பதாகச் சொல்லும் நாம்தான் நம் துணையிடம் கைபேசி கொடுக்க அஞ்சுகிறோம். அத்தனை மெல்லிய இழையில்தான் நாம் அவ்வளவு பெரிய கோட்டைகளைக் கட்டுகிறோம்.

நம் காதலுறவுகளைவிட ‍‍‍‍‍‍செல்பேசிகளின் பாஸ்வேர்டுகள் வலிமையாக இருக்கின்றன!

Also Read: ஹிட்லரை அவமதித்த இவர் யார்..? உலகப் புகழ்பெற்ற இந்தப் புகைப்படத்தின் பின்னணி தெரியுமா?