Cinema

Home மலையாள திரைப்படம் : தொழில்நுட்ப தலைமுறைக்கு சொல்ல வரும் சேதி என்ன? - சினிமா விமர்சனம்!

"இதுல ஸ்டேட்டஸ் எப்படி வைக்கணும்பா?"

ஒவ்வொரு வீட்டின் அப்பாவும் அம்மாவும் நம்மிடம் இக்கேள்வியை கேட்டிருப்பார்கள்.

பொதுவெளியில் செயல்படுவர்கள் பற்றிய பேட்டியோ செய்தியோ ஏதேனும் வெளிவந்தால் அது அவர்களின் அம்மாவின் வாட்சப் ஸ்டேட்டஸ்ஸில் தவறாமல் இடம்பெற்று விடும். யார் பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் தன் அன்பை வெளிப்படுத்தி விட்ட நிறைவு அவரிடம் இருக்கும்.

தொழில்நுட்பம் எந்தளவு உறவுகளை தூரமாக்குகிறது என்பதை பல முறை பேசி வருகிறோம். எனினும் நம் செல்பேசியை தள்ளி வைத்துவிட்டு நம் பெற்றோரிடம் பேசுவதற்கான நேரத்தை உருவாக்குவதில்லை. இப்பதிவை எழுதும் நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

கடந்த தலைமுறையின் வாழ்க்கை, நம்பிக்கை, விழுமியங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறாக நாம் உருவாகி இருக்கிறோம். இம்மாற்றம் அவர்களுக்கு ஏற்படுத்தும் கசப்பையும் பார்த்து என்ன செய்வதென தெரியாமல் கசாப்பு கூண்டுகளுக்குள் இருக்கும் கோழிகளாக திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த திணறலை, முதியோரிடம் நாம் கொள்ளும் தூரத்தை மிக அழகாகவும் எளிமையாகவும் அற்புதமாகவும் காட்டி இருக்கிறது Home மலையாள திரைப்படம்.

தொழில்நுட்பத்தால் நாம் கொள்ளும் மனம், அடைந்திருக்கும் மாற்றம், கொண்டிருக்கும் அவநம்பிக்கை என எவற்றையும் அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடிவதில்லை. அதனாலேயே நமக்கும் அவர்களுக்கு நேரும் தூரத்தையும் கசப்பையும் கூட கவனிப்பதில்லை.

50 வயதுக்கு மேல் இருப்போர் பலர் முதன்முறையாக ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான காரணம் பெரும்பாலும் ஒன்றுதான். தங்களின் மகன் மற்றும் மகள் ஆகியோரிடம் தொடர்பு கொள்ள மட்டுமே அவர்கள் வாங்குகிறார்கள். நமது வாழ்வின் பெரும்பான்மையை ஸ்மார்ட்போன் உள்ளிட்ட gadget-களிடம் ஒப்புக் கொடுத்து விடுவதால் அவர்களுக்கான இடத்தை நம் வாழ்க்கைகளில் இல்லாமல் ஆக்கி விடுகிறோம்.

அப்பாவின் அம்மாவின் வாழ்க்கைகளை லைக்குகள் பெறும் ஸ்டேட்டஸ்களாக பார்க்கும் மனப்பான்மை உருவாகி விடுகிறது. ஒரு லைக் கூட கிடைக்கப் பெறாத வாழ்க்கையை பெற்றோருடையது என்றாலும் புறக்கணிக்கிறோம்.

எனவே ஒரு ஸ்மார்ட்போனின் வாட்சப் ஸ்டேட்டஸ் வழியாக நம்மோடு தொடர்பு கொள்ள அவர்கள் முயலுகிறார்கள். அந்த ஸ்டேட்டஸ்ஸை நாம் பார்த்து விடுகையில் அவர்களுக்கான ஏற்பை நாம் வழங்கி விட்டதாக தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். காலத்தால் தாங்கள் பின் தங்கிவிடவில்லை என்பதை நமக்கு புரியவைக்க பிரயத்தனப்படுகிறார்கள். முகநூல் ஸ்டேட்டஸ், புகைப்பட பகிர்வு முதலியவற்றை கொண்டு காலத்துடன் பொருந்த தாம் விழைவதை நாம் ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறார்கள்.

அவர்களை நம் உலகுக்குள் நாம் அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்மார்ட்போன் வாங்குகிறார்கள். அதை பயன்படுத்த நம்மிடம் உதவி கோருகிறார்கள். ஒரு ஸ்வைப்புக்கு மேல் ஒரு பதிவில் நிற்காத அவசர மனம் கொண்ட நம்மிடமோ அதற்கான பொறுமை இருப்பதில்லை. அவர்களாக கற்க முயன்று தவறுதலாக ஒரு படத்தையோ அர்த்தமில்லா எழுத்துகள் கொண்ட கமெண்ட்டையோ சமூக தள உலகத்தில் பதிவிடுகிறார்கள். அதை காணும் நாம் அவமானத்துக்கு உள்ளாகிறோம். நேரம் பகிர விரும்பாத நாம் அவர்களை அழைப்பதற்கு நேரம் செலவழித்து திட்டுகிறோம். பிறகு தொழில்நுட்பத்துக்குள் மூழ்கி விடுகிறோம்.

அர்த்தமற்ற கமெண்ட்டை சமூகதள அண்டத்துக்குள் தேடி அழித்து மீண்டும் நம்மின் ஏற்பை அடைய அவர்கள் அலைபாய்கிறார்கள்.

Home அற்புதமான ஒரு இடம். அதற்குள் நிகழும் சண்டை சச்சரவுகளை தாண்டி எந்த ஸ்வைப்புமே இல்லாமல் மீண்டும் அன்பு அங்கு நிரம்பும் என்பதை எந்தவித உறுத்தலுமின்றி கவிதையாய் கடத்துகிறது இப்படம்.

கொஞ்சம் மொபைல் போனிலிருந்து வெளியே வந்து பார்த்தால் அதில் நேரும் எந்த விஷயமும் நம்மை பாதிக்கவில்லை என புரிந்து கொள்ள முடியும். ஜீத்து ஜோசப்பின் படங்கள் தொடங்கி ஹோம் படம் வரை தொழில்நுட்பம் மாற்றியிருக்கும் குடும்ப மற்றும் சமூக உறவுகளை மலையாள சினிமாதான் அதிகம் பேசியிருக்கிறது. அவற்றின் உச்சம் இப்படம்.

நாம் அடைக்கப்பட்டிருக்கும் சிறைகளை பற்றி தெரிந்து கொள்ள இப்படத்தை பார்த்துவிடுங்கள்.

Also Read: வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் 'அசுரன்' நடிகர்... இந்திக்கு செல்லும் 'ஓ மை கடவுளே' : சினிமா துளிகள்!