Cinema

“கத்தி, துப்பாக்கி பதில் பேனா, கேமராவை கையில் ஏந்திய போராளி ஜனா சார்” : உதவி இயக்குநரின் கண்ணீர் பதிவு !

தமிழ்த் திரையுலகில் வெகுஜன மக்களுக்கான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் அதிகமாக பொதுவுடைமை கருத்துகளைப் பேசி தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வந்தார். படப்பிடிப்பு முடிந்து படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்துவந்தன.

இந்நிலையில், மார்ச் 11ம் தேதி ‘லாபம்’ படத்திற்காக எடிட்டிங் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். பிறகு, நீண்ட நேரமாக ஸ்டுடியோவிற்கு திரும்பாததால் உதவியாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது எஸ்.பி.ஜனநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், இன்று எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீரென்று மாரடைப்பும் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கவிஞர் வைரமுத்து, உதவி இயக்குநர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் என பலரும் சமூக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லாபம் படத்தில் பணியாற்றிய ஷாஜன் என்ற உதவி இயக்குநர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இருபது நாள் லாபம் ஷூட்ல வேலை செய்யுற வாய்ப்பு கெடைச்சுச்சு காலைல மாஸ்க்கும். சானிடைசரும் கொடுக்கும் போது “நீ மாஸ்க் போடுன்ற, உலக சுகாதார மையம் வேனான் சொல்றான் யார் சொல்றத கேக்குறது” இப்படி சொல்லிட்டு ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சிட்டு “இருந்தாலும் உன் உழைப்ப மதிக்குறேன் அதுனால போட்டுக்குறேன்” சொல்லிட்டு மாஸ்க் எப்படி போடுறது எது முன்னாடி வரும்ன்ற மாறி கேட்டுட்டு அவர் வேலைய தொடங்கிருவாரு..

ஷூட்ல ’உலகாயுதம்ற’ அவ்ளோ பெரிய புத்தகத்த பக்கத்துலயே வச்சுட்டு இருப்பாங்க உதவி இயக்குனர்கள். தத்துவங்களும் சித்தாந்தங்களும் நமக்கு கிடைச்ச பெரிய அறிவாயுதம். அத எளிமையா மாத்தி எளிய விளிம்பு நிலை மக்கள்கிட்ட கொண்டு போய் சேக்கணும்றது ஒவ்வொரு தோழரின் கடமை. அந்த கடமைய கலை வடிவமா மக்கள்கிட்ட கொண்டு போன ஒரு மனுஷன். கலை மக்களுக்கானது மக்களுக்கானவன் கலைஞன்.

இவரின் இழப்பு பெரியது. ஆனா பின் வரும் தலைமுறைக்கு உழைப்புன்னா என்ன சுரண்டல்னா என்னன்னு கேக்கும் போது, பேராண்மை படத்துல வர NCC மாணவிகளுக்கு பாடம் எடுக்குற காட்சிய போட்டு காட்டுவேன். அரசியல் பொருளாதாரம் தெரியாம எதுமே பண்ண முடியாது. ஒரு சின்ன குழந்தைக்கும் நாம பேசுறது சொல்ல வரது புரியுதுன்னா அது தான் கலையோட வெற்றி, கலைஞனோட வெற்றி நீங்க ஜெய்ச்சுடீங்க.

நீங்க எங்களுக்கு காட்டுன பாதை பெருசு, அது மக்களுக்கானது. உங்கள ஒரு பெரிய இயக்கமா (movement) மாற்ற தவற விட்டோம். இருந்தும் சுத்தி, அருவாள், கத்தி, துப்பாக்கி பதிலா நீங்க தேர்ந்தெடுத்த பேனாவும், கேமராவும், லென்சும் இந்த சமூகத்துக்கு தேவைன்னு உணர்ற ஒரு கூட்டம் உருவாகி இருக்கு. அது உழைக்கின்ற எளிய ஒடுக்கப்படுகிற மக்களுக்கான உங்க பணிய தொடரும்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், எழுத்தாளர் அதிஷா எழுதியுள்ள தனது பதிவில், “ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமாக நின்று சிந்திப்பதை எந்நாளும் கைவிடாதவர். வாழ்வை அறிவியலின் கண்கொண்டு அணுகுவதை எப்போதும் வலியுறுத்தியவர். தன் படைப்புகளிலும் விடாப்பிடியாக மக்களுக்கான அரசியலை மக்களுக்கு புரிகிற மொழியில் எளிமையாக பேச முயன்றவர். தன்னுடைய பேச்சில் மட்டுமல்லாது படங்களிலும் பொதுவுடைமையை முன்னிறுத்திய அரசியல் படைப்பாளி. அசல் போராளி. என்னைப்போல பலருக்கும் நல்ல வழிகாட்டி" தெரிவித்துள்ளார்.

Also Read: பெரியாருக்கு அவமரியாதை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - மன்னிப்புக் கோரிய இயக்குநர் செல்வராகவன் ! (Video)