Cinema
“காலம் பிரித்தாலும் அவரது தேன் குரல் காற்றில் தவழும்” - பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், “ ‘ஆயிரம் நிலவே வா’ என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.
கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!
அவருடைய மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம்.
16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவர். இனிய பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி. அவர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“சபரிவர்மனின் மர*த்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!