Cinema

“ஸ்வரா பாஸ்கரின் கருத்து கிரிமினல் குற்றமல்ல” - பா.ஜ.க வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்காத அட்டர்னி ஜெனரல்!

பாபர் மசூதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விமர்சித்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு பலத்த விவாதங்களைக் கிளப்பியது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பலர் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், ராமர் கோயில் தீர்ப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தார்.

அப்போது, “நம் அரசியலமைப்பை நம்பாத ஒரு அரசால் நாம் ஆளப்படுகிறோம். நாம் நம்பாத போலிஸால் ஆளப்படுகிறோம். எங்கள் நீதிமன்றங்கள் அரசியலமைப்பை நம்புகிறதா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் நாம் இப்போது இருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தைத் தெரிவித்ததற்காக ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என பா.ஜ.க ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி பெற்ற மேஹக் மகேஸ்வரி உள்ளிட்ட பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர்கள், ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மனு செய்தனர்.

இதுகுறித்து பதில் அனுப்பியுள்ள அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “அவரது கருத்து ஒன்றும் கிரிமினல் குற்றமல்ல. எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூஷன் மன்னிப்புக் கோர மறுப்பதால் உச்சநீதிமன்றம் செய்வதறியாது திகைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மன்னிப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை; வழக்கை வாபஸ் பெறுங்கள்” - பிரசாந்த் பூஷன் தரப்பு வாதம்!