Cinema

தொடர்ந்து சிக்கலில் தவிக்கும் ரஜினியின் ‘தர்பார்’ : போலிஸ் கமிஷ்னரை நாடிய லைகா!

ரஜினிகாந்த் - முருகதாஸ் கூட்டணியில் முதல் முதலாக உருவாகியுள்ள தர்பார் படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீசானது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரஜினி ரசிகர்களும் குடும்ப ரசிகர்களும் தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், படம் வெளியான அன்றே சில மணிநேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக தர்பார் படம் வெளியானது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தந்தது.

தற்போது, தர்பார் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது, இணையத்தில் வெளியான தர்பார் படம் வாட்ஸ் அப்களில் 3 பாகமாக பிரித்து பகிரப்பட்டு வருகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான தயாரிப்பு நிறுவனமான லைகா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

லைகா நிறுவனம் சார்பில் அவரது தலைமை செயலதிகாரியும், அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் இயக்குநர் கே.ராஜன் ஆகியோர் தியேட்டரில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு வாட்ஸ் அப்பில் பகிர்வதை தடுக்க வேண்டும் என்றும், தர்பார் படத்தை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிவா, கே.ராஜன் ஆகியோர் பேசுகையில், தர்பார் படத்தை சட்டவிரோதமாக வாட்ஸ் அப்பில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலிஸார் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், வாட்ஸ் அப்பில் பகிர்பவர்களை சைபர் க்ரைம் பிரிவினர் ட்ராக் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே தர்பார் படத்தை 1370 இணையதளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருப்பினும் தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படம் வைரலாவது விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”கைதிகள் ஷாப்பிங் போகலாம்”: சசிகலாவை குறிக்கும் ’தர்பார்’ வசனம் நீக்கம் - மிரட்டலுக்கு பணிந்தது லைகா!