Cinema

“இங்கு சினிமா யாருக்கும் சொந்தமில்லை” - மார்டின் ஸ்கார்சிஸிக்கு அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் பதிலடி!

ஹாலிவுட்டின் திரையியக்க மேதை என்று அழைக்கப்படும் மார்ட்டின் ஸ்கார்சிஸி (martin scorsese) சில மாதங்களுக்கு முன்பு, “மார்வெல் திரைப்படங்கள் எல்லாம் தன்னைப் பெரிதும் கவர்வதில்லை, அவை எல்லாம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போலத்தான் இருக்கின்றன” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பலதரப்பட்ட சினிமா ரசிகர்களும், திரைத்துறை கலைஞர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிகழ்வு ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதனால், இயக்குநர் மார்ட்டின் தனது தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக மார்வெல் போன்ற பல Franchise கதைகள் மீது தனக்கு ஏன் ஆர்வமில்லை என்பதை சமீபத்தில் விளக்கினார். “என்னுடைய கருத்தை நான் ஓர் எதிர்மறை எண்ணத்தில் பதிவு செய்யவில்லை. நேர்மறையாகத்தான் கூறியிருந்தேன். ‘மார்வெல் படங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்வதில்லை’. அவை சினிமாவாக இல்லை. அவை வெறும் பொழுதுபோக்காகத்தான் இருக்கின்றன” எனத் தன் கருத்தை தெளிவாக விளக்கினார்.

Martin Scorsese

தொடர்ந்து “சினிமா என்பது மனித உணர்வுகளையும், அவர்களுடைய வாழ்வியலையும் பேசவேண்டும். நாம் காணாத ஒன்றை இதுவரை கண்டிராத வேறொரு கண்ணோட்டத்தில் காண்பிக்க வேண்டும். அப்படியான சினிமாக்களைத்தான் சினிமாவாக எண்ண முடியும்” என்றார். இப்படியான ஒரு அனுபவங்களைத்தான் மார்ட்டினின் படங்களும் கொடுக்கும் என்பதால் பலரும் இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டனர்.

‘என் பாடல்களைப் பயன்படுத்தும் இசையமைப்பாளர்கள் எல்லோரும் ஆண்மை இல்லாதவர்கள்’ என இளையராஜா கூறிய கருத்துக்கு இளம் இசையமைப்பாளர்கள் மெளனம் காத்துவந்தனர். அதைப் போலவே, மார்ட்டினும் ஒரு மூத்த, திரை இயக்க மேதை என்ற வகையில் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் ரோஸ்ஸோ சகோதரர்கள் மெளனம் காத்துவந்தனர். இருப்பினும் அவர்களிடம் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து “இங்கே சினிமா யாருக்கும் சொந்தமில்லை. எங்களுக்கும் சொந்தமில்லை, ஸ்கார்சிஸிக்கும் சொந்தமில்லை.

Russo Brothers

மேலும், “அவர் சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர் இன்னும் எங்கள் படங்களைப் பார்க்கவில்லை என்றே புரிகிறது. படத்தை இதுவரை பார்க்காத ஒருவருடன் எப்படி எங்களால் அறிவார்ந்த ஒரு விவாதத்தை எதிர்பார்க்க முடியும்” என பதிலடி கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவாதம் முடிவுக்கு வருமா இல்லை மீண்டும் தொடருமா எனும் கேள்வி தற்போது ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.