Cinema

‘முதல்வன்’ கதை தோன்றிய கதை தெரியுமா? #20YearsOfMudhalvan

ஜீன்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே அடுத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை இயக்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஷங்கர். அவர் விரும்பும் கதை யாரிடமும் இல்லை. சுஜாதாவைக் கேட்கலாம் என்றால் கதையைத் தாங்க, திரைக்கதை எழுதி தருகிறேன் என்று சொல்லிவிட்டார் அவர். எப்படி புரண்டு பார்த்தும் கதை எதுவும் அமையவில்லை. கடைசியில் அசிஸ்டெண்டுகளுடன் வெளியூர் பயணமானார்.

வெளியூர் வந்து சில தினங்கள் கழிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. யார் சொல்கிற ஐடியாவும் ஷங்கரை கவரவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகையில் ஒரு செய்தியை வாசித்தார். அமெரிக்காவின் ஒரு நகரத்தில் ஒருநாள் மேயராக இந்திய விஐபி ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்தது அந்தச் செய்தி. ஒருநாள் மேயராகிறவர், ஒரு கட்டிடத்தையோ இல்லை வேறு எதையாவதையோ இடிக்கச் சொன்னால் என்னாகும்? ஒருநாள் மேயராகி என்னதான் செய்வார்கள்? இப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு ஃப்ளாஷ். இதேபோல் ஒருநாள் முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?

அடுத்தடுத்த கேள்விகள், அதற்கான பதில்கள் என கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் ‘முதல்வன்’ என்ற மாபெரும் வெற்றிப்படம்.

முதல்வன் திரைப்படம் என்றாலே எல்லோருக்கும் உடனே ஞாபகம் வருவது அந்த புகழேந்தி vs அரங்கநாதன் தொலைக்காட்சி பேட்டி சீன் தான். அந்தக் காட்சியில் நான் எப்போதும் வியப்பது சுஜாதாவின் வசன எல்லை தான். தேர்தல் அறிக்கை ஞாபகம் இருக்கிறதா என அர்ஜுன் கேட்க, நல்லா எனக் கூறிவிட்டு அதில் இருப்பதை பார்க்காமலே மனப்பாடமாக சொல்லிக்கொண்டிருப்பர் ரகுவரன். அதில் "அனைவருக்கும் இலவசக் கல்வி, கல்வில புள்ளி இருக்காது" என்பார். இப்படி யோசித்து வியக்கவைக்கும் வசனங்கள் படத்தில் ஏராளம். படத்தின் முதல் ஹீரோ ஷங்கர் என்றால் இரண்டாவது ஹீரோ சுஜாதா தான்.

ரகுவரன் நாம் கொண்டாடுவதற்கு தயாராய் இருந்தும் அதற்கு வாய்ப்பில்லாமல் போன அபாரமான கலைஞன். அவர் தன் வாழ்நாளில் தனக்கான ஒரு கதாபாத்திரத்தைப் பெற்றார் என்றால் அது இந்த 'அரங்கநாதன்' கதாபாத்திரமாகத் தான் இருக்கும். ஹீரோவை ஒரு முறை கூட அடித்திருக்கமாட்டார். மக்கள் பிரதிநிதி என்பது தான் வேடம். ஆனால் ஒரு தலைமுறைக்கான வில்லத்தனம் அந்தப் பார்வையில் இருக்கும். அடடா! இன்னுமொரு நூறு படங்கள் நீ நடித்திருக்கலாமய்யா!

அர்ஜுன், மனீஷா கொய்ராலா, விஜயகுமார், ஏ.ஆர்.ரஹமான் என படத்தில் பங்குபெற்ற அத்தனைபேரும் தத்தமது வேலைகளை மிகச்சிறப்பாகவே செய்திருந்தனர். எல்லோருமே தங்கள் துறையில் பெரும் ஆளுமைகள். எனவே இவர்களின்றி நான் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன், அது மணிவண்ணன்!


வில்லனின் பக்கமும் இருப்பார், ஹீரோவின் பக்கமும் இருப்பார், இருவருக்கும் சப்போர்ட் செய்வார், “இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்று வியந்துகொண்டே, ஜெயிக்கும் ஹீரோவின் பின்னால் நின்று கொள்வார். யோசித்துப்பார்த்தால் தமிழ் சமூகத்தின் வெகுஜன மனநிலையின் ஒரே அடையாள முகம்தான் அந்த கதாபாத்திரம். அதை அத்தனை சிறப்பாகச் செய்ய மணிவண்ணன் என்னும் நடிகன் தேவைப்படுவான். இனியும் இதுபோன்ற கதாபாத்திரங்கள் ஏராளம் வரும், அதில் நடிப்பதற்கான பெஞ்ச் மார்க் மணிவண்ணன் தான். உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு அவர் தந்து சென்றதுதான்.

இப்படி எத்தனையோ அதிசயங்கள் நடந்த இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு "நிகழ்ந்துவிட்ட அற்புதம்" தான்!