Cinema
“சினிமாவுக்கு முன்பே புகழ் வெளிச்சத்தில் மின்னிய வில்” - வில் ஸ்மித் பிறந்ததின சிறப்பு பகிர்வு!
எப்போதுமே ஒரு நடிகருக்கு இருக்கும் சவால், ஸ்டீரியோ டைப் ஆகிவிடாமல் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் தன்னுடைய முத்திரையை பதிப்பதில்தான் வந்து நிற்கும். இந்த மாதிரி படங்களும் அமைந்து எல்லா தரப்புக்கும் பிடித்தமாதிரி நடிகராக மாறி நிற்பது சிலருக்கு மட்டும் பளிச்சென்று அமைந்துவிடும். அந்தமாதிரி பளிச்சிடும் நட்சத்திரங்களில் ஒருவர் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். ஹாலிவுட்டே உச்சத்தில் வைத்துக் கொண்டாடும் வில் ஸ்மித்துக்கு இன்று பிறந்தநாள்.
இப்போது நடிப்பில் அமர்க்களப்படுத்தும் வில், தன் கலை வாழ்க்கையைத் துவங்கியது இசைக் கலைஞராக. பள்ளிப்படிப்பு முடிந்து MITயில் சேர்ந்து படிக்க பிரமாதமான வாய்ப்பிருந்தும், அதை உதறித் தள்ளிவிட்டு "நான் ராப் பாட விரும்புகிறேன்" என்றார் வில். சொன்னது மட்டுமில்லை, MIT அட்மிஷன் கிடைத்தும் "எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல" என்றபடி தன்னுடைய ராப் இசையை கைப்பற்றிக் கொண்டார். தன் நண்பர்களுடன் இணைந்து பல ராப் ஆல்பங்களில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எவ்வளவு ஹிட் என்றால், Grammy விருது, Billboard hot 100ல் இடம்பெறும் பாடல் என புகழ் ஒருபக்கம். வருமானம் குவிய வருமான வரித்துறை ரெய்டு வருமளவு பணம் ஒருபக்கம் என சினிமாவில் நடிக்க வரும் முன்பே, லைம்லைட்கள் வில் ஸ்மித் முன் லைன் கட்டி நின்றன.
ராப் பாடகராக மக்களிடம் பிரபலமடைந்திருந்த வில் ஸ்மித்தை சும்மா விடுமா ஹாலிவுட்? இழுத்து வந்தது சினிமா உலகிற்கு. ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், விஜய் எனப் பலரும் அறிமுகமான 1992 தான் வில் ஸ்மித் சினிமாவில் அறிமுகமான வருடமும். அதனால் 90ஸ் கிட்ஸுக்கு வில் எப்போதும் ஸ்பெஷல்தான். முதல் மூன்று படங்களிலும் வில் ஒரு அறிமுகம் போல்தான் ட்ரீட் செய்யப்படடார். ஆனால், நாலாவதாக வந்த 'பேட் பாய்ஸ்' அறிமுகம் அல்ல, நரிமுகம்.
பேட் பாய்ஸ் சீரிஸ், எவ்வளவு பெரிய ஹிட் என்பது உலகிற்கே தெரியும். அதன் பின்பு வந்த 'மென் இன் ப்ளாக்' சீரிஸும் பக்கா மாஸ். இது தவிர சோலோ படங்களான 'Independence Day', 'Enemy of the State', 'I, Robot', 'The Pursuit of Happiness', 'I Am Legend', 'Hancock', லேட்டஸ்டாக ரிலீஸான 'Aladdin' வரை கமர்ஷியல் + Artistic படங்கள் என் கலந்து கட்டி மெர்சல் பண்ணுகிறார்.
செம ஜாலியான மென் இன் ப்ளாக், ஜே கதாபாத்திரமானாலும் சரி... மிக அழுத்தமான நடிப்பைக் கொடுக்கும் 'The Pursuit of Happiness'ல் வரும் Chris Gardner போன்ற கதாபாத்திரமானாலும் சரி... அதற்கு தகுந்த நியாயத்தை செய்ய மட்டும் வில் ஸ்மித் செய்யத்தவறியதே கிடையாது.
charityக்காக ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசம் செய்வது, பொது இடங்களில் சந்திக்கும் ரசிகர்களிமும் எந்த முகச்சுழிப்பும் இன்றி இன்முகம் காட்டி, அரட்டையடித்து செல்ஃபி எடுத்து அனுப்புவது என திரையில் மட்டுமல்ல தரையிலும், கூட கனிவையும், கலகலப்பையும் பொதுவெளிகளிலும் கூட தொடர்வார் வில்.
அதேதான் தன்னுடைய குழந்தைகளுக்கும். அன்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவர்கள் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறார்கள் என்கிற தேர்வை அவர்களையே முடிவு செய்யவிட்டுத் துணை நிற்பார். நமக்கு பரிட்சயமான ஜேடன் ஸ்மித்தை எடுத்துக் கொள்வோமே. முதலில் குழந்தை நட்சத்திரமாக The Pursuit of Happinessல் நடித்தார்.
தொடர்ந்து கராத்தே கிட், ஆஃப்டர் லைஃப் படங்களிலும் நடித்தார். பிறகு சினிமாவிலிருந்து விலகி, இசைத்துறைக்குள் நுழைந்தார். இப்போது புள்ளிங்கோ ஸ்டைலில் காஸ்டியூம் போட்டுக்கொண்டு ஃபேஷன் துறைக்குள் காலெடுத்து வைத்திருக்கிறார். ஆனால், இது எதற்கும் நெகட்டிவ் ரியாக்ஷன் கொடுக்காமல், மகன் தன் துறையை தேர்வு செய்ய பொறுப்பாக உதவிக் கொண்டிருக்கிறார்.
இந்த பிறந்தநாளோடு அரைசதம் ஆடி முடித்து, 51ல் காலெடுத்து வைக்கிறார். ஆனாலும் அறிமுகமானபோது இருந்த அதே சுறுசுறுப்பு, துருதுருப்பு இப்போது வரை மெய்ன்டெய்ன் ஆகிறது. சந்தேகம் என்றால் லேட்டஸ்டாக வந்த அவரின் பேட் பாய்ஸ் 3 ட்ரெய்லரைப் பாருங்கள். அதோடு 90’ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜியாவை ஒதுக்கிவிடாமல் அதை மதித்து ரீபூட் செய்வதிலும் வில் ஸ்மித் மதிக்கத்தக்கவர். ஒருபுறம் பேட் பாய்ஸ் அடுத்த பார்ட் என்றால், இன்னொரு புறம் I, Robotஐ நினைவுபடுத்தும் படியாக உருவாகியிருக்கும் ஜெமினி மேன் படமும் எதிர்பார்ப்பை கிளறுகிறது.
இப்படியாக தொடர்ந்து எங்களை வியப்பில் ஆழ்த்தும் செயல்களைச் செய்துகொண்டே இருங்கள் வில் ஸ்மித்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!