Cinema

இயல்பாகச் செய்யும் உருவகேலி எத்தனை கொடூரமானது? : ‘தமாஷா’ விமர்சனம்! #DontMissMovie

இந்த இயக்குனரின் படமா, நம்பி தியேட்டருக்குப் போகலாம். இந்த நடிகரின் படமா, நம்பி தியேட்டருக்கு போகலாம். இதே மாதிரி சமீபமாக மலையாள படமா, நம்பி தியேட்டருக்கு போகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது மலையாளம் கூறும் நல்லுலகு. ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு நல்ல படத்தை வெளியிட்டே தீருவோம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ‘இஷ்க்’, ‘வைரஸ்’, ‘உண்டா’ என வாராவாரம் வெரைட்டி காட்டி வருகிறது மலையாள திரையுலகம். இதே வரிசையில் கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது ‘தமாஷா’.

அஷ்ரஃப் ஹம்ஷா இயக்கத்தில் வினய் ஃபோர்ட், சின்னு சாந்தினி, க்ரேஸ் ஆண்டனி, ஜான் கிளாரினேட் என பலரது நடிப்பில் வெளியாகியிருக்கும் தமாஷா 'ஒன்டு மொட்டேய கதே' என்ற கன்னட படத்தின் மலையாள ரீமேக். வழுக்கைத் தலையுடைய ஒரு கல்லூரிப் பேராசிரியரின் திருமண பெண்தேடும் படலமே படத்தின் கதை.

திருமணம் என்பது சந்தை என்று ஆனபின், மனிதர்களாகிய நாம் பொருட்களாக்கப்படுகிறோம். சந்தையில் பொருட்களை தரமாக எதிர்பார்த்தல் நலம், ஆனால் நாம் மனிதர்கள். நம்மை நம் இயல்புடனேயே சக மனிதர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். படம் பேசுவது இதைத்தான் என்றாலும் இதைத் தவிரவும் படத்தில் நிறைய இருக்கிறது.

உருவகேலி என்பது எத்தனை கொடூரமானது, ஆனால் எத்தனை இயல்பாக நாம் அதைச் செய்கிறோம் என்ற இரண்டு விஷயங்களையும் மிக மென்மையாக நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர். அதிலும் குறிப்பாக ஒருவரை முதல்முறை பார்க்கும்போதே நமக்குள் உருவாகும் எண்ணத் தவறுகள் மிகச்சரியாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

’ப்ரேமம்’ படத்தில் அந்த ஜாவா ஆசிரியரை பார்த்து எவ்வளவு சிரித்திருப்போம் (அதன்பின் ஏராளமான படங்கள் நடித்துவிட்டார்). அவர்தான் ‘தமாஷா’ படத்தின் ஹீரோ. மனிதன் உருகவைத்து விடுகிறார். மற்ற நடிகர்கள் அனைவருமே சின்னச்சின்ன நடிகர்கள்தான் என்றாலும் நம் வாழ்க்கையின் கதாபாத்திரங்களாகவே மாறிவிடுகிறார்கள். முக்கியமாக 'சின்னு', வால்பேப்பராக வைத்துக்கொள்ளும் அளவுக்கான அழகும், நடிப்பும்.

மலையாள சினிமாக்காரர்கள் தங்களது கலாச்சாரத்தை அத்தனை பெருமிதமாக அதேநேரத்தில் இயல்பாக சினிமாவில் காட்டி விடுகின்றனர். கொச்சியில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் 'Bienale' என்ற கலை விழாவை அத்தனை அழகாக படத்திற்கான கதைக்கருவிற்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

மிகச்சிறப்பாகச் செய்யப்பட்ட திரைக்கதையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் ஒரு பகுதி மட்டும சற்று மிகையாக இருப்பதாகத் தோன்றியது.

படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு முழுமையான மகிழ்ச்சியுணர்வு ஏற்படுவதோடு அடுத்தவரை அணுகுவதில் ஒருகணம் யோசிப்பதற்கான வாய்ப்பையும் தருகிறது.